

ஓய்வின்றி சதா சுற்றித் திரிந்துகொண்டு இருப்பவர்களையும் பறக்காவட்டிகளையும் குறிக்கும் விதமாக ‘ஏண்டா இப்படி ஆலாப் பறக்குற?’ என்று கிராமங்களில் கேட்பார்கள். ஆலாப் பறவைகள் பொதுவாக அதிகம் உட்காராமல் நீர்நிலைகளின் மேல் பறந்துகொண்டேதான் இருக்கும். இந்தப் பறவையைப் பார்த்துத்தான், அந்தச் சொலவடை வந்திருக்க வேண்டும்.
ஆலாக்கள் மிகவும் அழகான பறவைகள். கடலோரங்களில் பல வகையான ஆலாக்களைக் காணலாம். இவை அனைத்தும் வலசை வருபவை (Migrants). உள்நாட்டு நீர்நிலைகளில் குறிப்பாக ஆறுகள், பெரிய ஏரி, நீர்த்தேக்கம் போன்ற இடங்களில் ஆற்று ஆலாவையும் (River Tern), வலசை வரும் மீசை ஆலாவையும் (Whiskered tern) ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நீங்கலாகக் காணலாம். மூன்றாவதான கருவயிற்று ஆலா (Black-bellied tern) கூடுதல் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், இவை பெரும்பாலும் ஆறுகளில் மட்டுமே தென்படுகின்றன.
தத்தளிக்கும் வாழ்க்கை
கருவயிற்று ஆலாக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலும் (இலங்கையைத் தவிர) தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவியுள்ளன. என்றாலும் இந்தியாவைத் தவிர, ஏனைய நாடுகளில் அவற்றின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. வியட்நாமிலும் கம்போடியாவிலும் இவை முற்றிலும் அழிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
மியான்மரிலும், தாய்லாந்திலும் அண்மைக் காலத்தில் இவை பார்க்கப்பட்டதற்கான பதிவு ஏதும் இல்லை. இந்தியாவில்கூட ஒரு சில பகுதிகளில், பெரிய ஆறுகளில் ஆங்காங்கே இவை தென்படுகின்றன. வட இந்தியாவின் சில ஆறுகளின் ஒரு சில பகுதிகளில் இவற்றை ஓரளவுக்குப் பார்க்க முடியும்.
இந்தியாவில் ஆற்றுப் பகுதி காட்டுயிர்களுக்கெனப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருப்பது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ‘சம்பல் தேசிய காட்டுயிர் சரணாலயம்’ மட்டுமே. அதுபோலவே கர்நாடகத்தில் உள்ள காவிரி (ஆறு) காட்டுயிர் சரணாலயம், அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் உள்ள ‘காவிரி வடக்குக் காட்டுயிர் சரணாலயம்' வழியாகவும் பாய்வதால், அங்குள்ள இடங்களும் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு பகுதிகளிலும் இவ்வகை ஆலாக்களின் வாழிடம் ஓரளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. என்றாலும் இவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதால், ‘பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு நிறுவனம்' (International Union for Conservation of Nature - IUCN), இவற்றைச் சிவப்புப் பட்டியலில் (Red list) சேர்த்து அதிக ஆபத்தில் (Endangered) உள்ள பறவை இனங்களின் பிரிவில் வைத்துள்ளது.
ஆற்றின் இடையே உள்ள சிறு மணல் திட்டுகளிலும் ஆற்றுத் தீவுகளிலும், தரையில் இவை கூடமைக்கின்றன. ஆற்றுப் படுகையில் வேளாண்மை செய்வது, ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதால் இவற்றின் வாழிடம் சிதைவது, அழிவது, இவை முட்டை வைக்கும் காலங்களில் தடுப்பணைகளில் திடீரெனத் தண்ணீரைத் திறந்து விடுவதால் கூடுகள் நீரில் மூழ்கிப் போவது, ஆற்று மணல் சூறை, ஆலைக் கழிவுகளும் பூச்சிகொல்லிகளும் ஆற்றில் கலந்து நீரை மாசடையச் செய்வது, தெரு நாய்கள், பூனைகள், மனிதர்கள் உண்பதற்காக இவற்றின் முட்டைகளை எடுத்துச் செல்லுவது ஆகிய காரணங்களால் எண்ணிக்கையில் வெகுவாகக் குறைந்தும் பல இடங்களில் இவை அற்றும் போய்விட்டன.
மகிழ்ச்சியும் வருத்தமும்
தமிழகத்தில் இந்தப் பறவையின் பரவல், பாதுகாப்பு நிலை ஆகியவை குறித்த தரவுகளும் புரிதலும் மிகக் குறைவு. இச்சூழலில் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள ‘வாழ்க்கை', திருமானூர், அணைக்கரை பகுதிகளின் வழியே செல்லும் கொள்ளிடம் ஆற்றில், இப்பறவை அண்மையில் பதிவுசெய்யப்பட்டது. இப்பறவையைக் காண ஒரு நாள் மாலை அங்கே சென்றேன்.
அகண்ட ஆற்றில், நூலிழைபோல நீர் ஓடிக்கொண்டிருந்தது. சென்ற சிறிது நேரத்திலேயே கருவயிற்று ஆலாவைக் கண்டுவிட்டேன். அங்கு இருந்த ஒரு மணி நேரத்தில் 4 ஆலாக்களைத் தனித்தனியே பார்க்க முடிந்தது. சிறிய ஓடையைப் போல ஓடிக்கொண்டும், ஆங்காங்கே தேங்கியும் கிடந்த நீரின் மேல் அவை தாழப் பறந்துகொண்டிருந்தன.
மாலை நேரம் ஆக ஆக நூற்றுக்கணக்கான சின்ன தோல்குருவிகள் (Small Pratincole) பறந்து சென்றன. இவையும் ஆலாக்கள்போல மணலில் லேசாகக் குழி தோண்டி, அதில் ஓரிரு முட்டைகளை இடும் பண்பு கொண்டவை. அந்தி சாயும் நேரம்வரை இருந்து சிவந்த வானத்தின் பின்னணியில் ஆலாக்களும் தோல்குருவிகளும் பறந்து சென்ற அழகான காட்சியைக் கண்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டேன்.
திரும்பி வரும்போது சில பகுதிகளில் ஆற்றின் நடுவே சிவப்புக் கொடிகள் நட்டுவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன், ஆலாவைக் கண்ட மகிழ்ச்சியெல்லாம் படாரென்று வடிந்துவிட்டது. மணல் எடுக்கப் போவதற்கான முதல் அறிகுறி அது.
மணல் அள்ள எதிர்ப்பு
சமீபத்தில் திருமானூர் பகுதியில் மணல் எடுக்க கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டபோது, அருகில் உள்ள ஊர் மக்கள் திரண்டு அதைத் தடுத்திருக்கிறார்கள். ஆற்றில் தண்ணீர் சரியாக வருவதில்லை என்பதால் ஆழ்குழாய் அமைத்து, அந்த நீரையே பாசனத்துக்கு விடும் நிலைக்கு இப்பகுதி உழவர்கள் தள்ளப்பட்டிருகிறார்கள். ஒரு காலத்தில் 20-30 அடியில் கிடைத்த நீர், மணல் அள்ளுவதால் இப்போது 100 அடிக்கும் கீழே தோண்டிய பின்னர்தான் கிடைக்கிறது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
இதனாலேயே இங்கு மணல் தோண்டப்படுவதை அவர்கள் எதிர்க்கிறார்கள். அத்துடன் அருகில் உள்ள தஞ்சை, கும்பகோணம், திருச்சி போன்ற நகரங்களுக்கான குடிநீர், இந்த ஆற்றுக்குள் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.
மனித அழிவின் தொடக்கம்
ஆறு என்பது இயற்கையான ஒரு வாழிடம். நீரைப் பயன்படுத்தும் ஒரு நுகர்வோரின் பார்வையிலேயே அதை நாம் அணுகுவதால், சமீபகாலமாக ஆற்றுக்கு இழைக்கப்பட்டுவரும் பெரும் அநீதி பெரும்பாலோர் கண்களை மறைத்துவிடுகிறது. ஆற்று நீர், ஆற்றங்கரை, ஆற்றோரக்காடுகள், நாணல் புதர்கள், மணல் படுகை, மணல் திட்டுக்கள், பாறைகள் யாவும் ஆற்றின் பிரிக்க முடியாத அங்கங்கள்.
இவை அனைத்தும் ஆற்றில் உயிர்வாழும் பல வகைப் பூச்சிகள், மீன்கள், தவளைகள், முதலைகள், ஆமைகள், பறவைகள், நீர்நாய்கள் யாவற்றுக்கும் வீடாகவும் வாழிடமாகவும் திகழ்கின்றன. இந்த ஒட்டுமொத்தச் சூழலையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் வழியே ஓடும் காவிரி ஆற்றின் நில வரைபடத்தை GoogleEarth அல்லது Google Map-ல் பார்த்தால் மணலுக்காகக் காவிரி ஆறு எந்த அளவுக்குச் சூறையாடப்பட்டிருகிறது என்பதைத் தெளிவாகக் காணலாம். அழியும் ஆபத்தில் உள்ள கருவயிற்று ஆலாவின் வாழ்வுக்கு இன்றைக்கு வந்துள்ள துன்பங்கள் மேலும்மேலும் அதிகரித்தால், அவை நிச்சயமாக ஆலாவோடு நின்றுவிடப் போவதில்லை.
அந்தத் துயரங்களை நாமும் விரைவில் அனுபவிக்க வேண்டிவரும். ஆற்று மணலை அள்ளுவதற்கு நடப்படும் சிவப்புக் கொடி, ஆற்று உயிரினங்களுக்கு மட்டுமல்ல; இயற்கை வளங்கள் இன்றி மனிதர்கள் திண்டாடப்போவதற்குமான முதல் அறிகுறி.
ஜன. 14-17-ல் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகத்தில் 2015-ம் ஆண்டிலிருந்து பொங்கல் நாட்களில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்குத் தங்களைச் சுற்றியுள்ள பறவைகளை அடையாளம் கண்டு, அவற்றின் எண்ணிக்கையுடன் ஒரு பட்டியலைத் தயார் செய்து eBird இணையத்தில் பறவை ஆர்வலர்கள் உள்ளிடுவார்கள். வீட்டின் மொட்டைமாடி, கொல்லைப்புறம், குளம் என எங்கிருந்து வேண்டுமானாலும் பறவைகளைப் பார்த்துப் பட்டியலிடலாம். இந்த ஆண்டுக்கான (2019) பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு ஜனவரி 14-17-யில் நடக்க உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்கள், வழிகாட்டுதலுக்கு: http://bit.ly/2QCRzZJ |
கட்டுரையாளர், எழுத்தாளர்-காட்டுயிர் ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: jegan@ncf-india.org