

‘நெல் ஜெயராமனுக்கு ‘இந்து தமிழ்’, ‘நிலமும் வளமும்’ இதழுக்கும் இடையிலான தொடர்பு ஐந்தாண்டுகளாக தொடந்து நீடித்து வந்தது. அவரது இழப்பின் மூலம் அந்தத் தொடர்பு அறுபட்டுவிட்டது.
சித்திரக் காலி வாளாண்
சிறை மீட்டான் மணல்வாரி
செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்து விளங்கி மலை
முண்டன் பொற்பாளை நெடு
மூக்கன் அரிக்கிராவி மூங்கிற் சம்பா
கத்தூரி வாணன் கடைக
கழுத்தன் இரங்கல் மீட்டான்
கல்லுண்டை பூம்பாளை
பார்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச் சம்பா
இது தமிழ்ச் சிற்றிய இலக்கியங்களுள் ஒன்றான முக்கூடற்பள்ளு பாடல் கூறும் விதை நெல் வகைகளைப் பற்றிய குறிப்பு. இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையும் நெல்லின் பெருமையைச் சொல்கிறது. இப்படிப் பல்லாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட நம் மரபான நெல் ரகங்களை மீட்டெடுக்கும் அரும் பணியைச் செயதவர் ‘நெல்’ ஜெயராமன். இதற்காகத் தன் வாழ்நாளின் ஒரு பகுதியைச் செலவிட்டவர் அவர்.
கிராமங்களில் எதிர்படக்கூடிய சாதாரண மனிதர்களுள் ஒருவர்தான் ஜெயராமன். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தொழில் முழுநேர விவசாயமும் இல்லை; ஒரு அச்சுக்கூடத்தை நடத்திவந்தார். ஆனால், அவருக்கிருந்த சமூக அக்கறையால்தான் அவர் ‘நெல்’ ஜெயராமன் ஆனார்.
ஜெயராமன், நுகர்வோர் பிரச்சினைகளுக்கான சட்டப் போராட்டத்தின் மூலம் தன் சமூகப் பணியைத் தொடங்கியிருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான் பெரும் உற்பத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பசுமைப் புரட்சியின் பலவீனங்கள் பரவலாகப் பேசப்பட்டன. அதனால் சமூகம், இயற்கை விவசாயம்மீது தன் கவனத்தைத் திருப்பியது. மறைந்த இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் இந்த மாற்றத்துக்கான விதையை ஊன்றியவர். அதில் கிளைவிட்டவர் என ஜெயராமனைச் சொல்லலாம்.
மக்களுக்கு நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தால் ஜெயராமன் நம்மாழ்வாருடன் தன்னை இணைத்துக்கொண்டார். நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்படிதான் விதைநெல் சேகரிப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினார். நம்மாழ்வாருடனான ஒரு பயணத்தின்போது விதை நெல்லைத் தேட அவர் பணிக்கப்பட்டார். தமிழகத்தின் பயன்பாட்டிலிருந்து அருகிவிட்ட நெல்ரகங்களைத் தேடும் அரும் பணியில் ஈடுபட்டதால் அவருக்கு ‘நெல்’ ஜெயராமன் எனும் பெயரைச் சூட்டினார் நம்மாழ்வார்.
இதுவரை 174 நெல் வகைகளை ஜெயராமன் மீட்டெடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டிக்கு அருகில் ஆதிரெங்கம் என்னும் கிராமத்தில் நெல் மையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த மையத்தின் மூலம் பாரம்பரிய நெல் விதைகளைப் பரவலாக்கி வருகிறார். இதற்காக ஆண்டுதோறும் விதைத் திருவிழவை நடத்திவருகிறார். 2006-லிருந்து தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் இந்த விழாவில் பங்கெடுக்கும் விவசாயிகளுக்கு 2 கிலோ விதை நெல் இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்கள் அடுத்த ஆண்டு விழாவுக்கு அதை இரட்டிப்பாக்கித் தர வேண்டும். இந்தப் புதிய திட்டம் மூலம் மரபு நெல் ரகம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளைச் சென்று சேர்ந்திருக்கிறது.
ஒரு அரசு செய்ய வேண்டிய காரியத்தைத் தனி ஒருவனாக நின்று செய்துவந்தவர் ஜெயராமன். தான் இறப்பதற்கு முன்பு அடுத்த விதைத் திருவிழா பற்றிப் பேசியுள்ளார். ‘இந்து தமிழ்’ நாளிதழில் அவர் எழுதிய தொடர் மூலம் விவசாயிகளிடம் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
‘இந்து தமிழ்’ நாளிதழுடன் இணைந்து அவர் நடத்திய விதைத் திருவிழாக்கள் சமூக மாற்றம் உண்டாக்கிய நிகழ்வுகள். “மைக்கடல் முத்துக்கு ஈடாய் / மிக்க நெல் முத்து உண்டாக்கும்/ வடிவழகக் குடும்பன் நானே” என நெல் உண்டாக்கும் விவசாயியைக் கொண்டாடும் முக்கூடற்பள்ளு பாடல்போல நெல் முத்து உண்டாக்கிய இந்தக் காலத்தின் நாயகன் என ஜெயராமனைப் போற்றுவோம்.