அருமையான எருமை மாடுகள்

அருமையான எருமை மாடுகள்

Published on

விவசாயிகள் வேளாண்மையை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பையும் சார்புத் தொழிலாக மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நாட்டு மாடுகள், எருமை மாடுகள் வளர்ப்பு, விவசாயத்தின் அங்கமாகவே இருந்து வந்தன. வறட்சியைத் தாங்கி வளரும் உடல் அமைப்பு, கடின உடல் உழைப்பு போன்ற அம்சங்களால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழிலை விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர்.

இவற்றில் எருமை மாட்டுப் பால், நாட்டுப் பசுவின் பாலைக் காட்டிலும், திடமும் கொழுப்புச் சத்தும் கொண்டது. அதனால் எருமைப் பாலில் ஊட்டச்சத்து அதிகம். தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப்போகாத தன்மையும் எருமைப் பாலுக்கு உண்டு. இது பால் சார்ந்த இனிப்புப் பொருட்கள் தயாரிப்புக்கு உகந்தது.

வெண்மைப் புரட்சி

ஆனால், அதிக பால் உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு, `வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் கால்நடை வளர்ப்பில் பல மாற்றங்கள் உருவாயின. இதனால், நமது மண்ணுக்குத் தொடர்பில்லாத, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழில் அரிதானது.

பெரும்பாலான மாடுகள் கொத்துக் கொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இறைச்சிக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிமாடுகளாக அனுப்பிவைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு மாட்டு வகையையே விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.

எனினும், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த நாட்டு மாடுகளைத் தற்போது பலரும் விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டு மாட்டின் பால் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு, அழிந்துவரும் எருமை மாட்டினங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.

பிற மாட்டு இனங்களைப் போல எருமை வளர்ப்புக்குத் தனிப்பட்ட கவனிப்போ செலவோ தேவையில்லை. நீண்ட கொம்புகளுடன், கரிய நிறத்தில் பெரிதாக வளரும் இவற்றுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு ஆற்றல் அதிகம். எனவே, நோய் தாக்கினாலும், அவை எளிதில் மரணமடையாது. தனிப்பட்ட தீவனங்களும் தேவையில்லை. அவிழ்த்துவிட்டால் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, சாதுவாக வீடு திரும்பிவந்து, பால் கறக்கும் தன்மை கொண்டவை.

“நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்கூட, எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாட்டு மாடுகளுடன் சேர்த்து, எருமை மாடுகளை வளர்க்க ஆசைப்பட்டாலும், அவை கிடைப்பதும் அரிதாக உள்ளது” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த து.ரவி.

மேலும், எருமைகளைப் பிற மாடுகளைப் போல் கட்டிவைத்து வளர்ப்பது சரியானதல்ல. அவற்றை அடைத்து வைத்து, எவ்வளவு சத்தான தீவனத்தை அளித்தாலும், குறைவாகவே பால் கறக்கும். மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றால் மட்டுமே, எதிர்பார்க்கும் அளவுக்குப் பால் கிடைக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும் எனச் சொல்கிறார் அவர்.

ஆனால், தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருளவு அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாவிட்டதால், இவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்புக்காக மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதுபெற்ற, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீரஜ் ராம்கிருஷ்ணா கூறுகையில், “எருமைகளை வளர்க்க நினைத்தாலும், அவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு நல்ல எருமை மாடு ரூ. 80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே, எருமை மாடு வளர்ப்பு அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாக இருக்கிறது” என்றார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.

விலை அதிகம்

மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in