Published : 24 Nov 2018 11:31 AM
Last Updated : 24 Nov 2018 11:31 AM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 17: வரையாடுகளின் காவலர்

பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் மையம், தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டின் வாழிடம் சீரழிந்துகொண்டே போகிறது என்று அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்தது. சீகை மரங்களையும் தைல மரங்களையும் காடுகளில் வளர்த்து, அந்தப் பிரதேசம் நாசமாக்கப்பட்டுவிட்டதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.  ஏற்கெனவே, அதன் தோலுக்காகவும் கொம்புக்காகவும் கள்ள வேட்டையாடிகளால் ஏறக்குறைய தீர்த்துக்கட்டப்பட்ட இந்த உயிரினத்தைக் காப்பாற்றியதில் தனியொரு மனிதரின் முயற்சி முக்கியப் பங்காற்றியது. 

அறுபதுகளில் காட்டுயிர்ப் பேணலில் அரசோ மற்ற நிறுவனங்களோ  அக்கறை ஏதும் காட்டாத நிலையில், சில காட்டுயிர் ஆர்வலர்கள், தனியாளாக, தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

மா. கிருஷ்ணன், காட்டுயிர் பற்றி எழுதினார். குன்னூரில் வாழ்ந்திருந்த  ஒரு சட்ட நிபுணர், இ.ஆர்.சி. டேவிடார் (1919-2016). மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிரியத்துக்குக் குறியீடாக இருக்கும் இந்த அரிய காட்டாடு மறைவதைக் கவனித்து, அவற்றைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் எடுத்தார். அந்தக் காலகட்டத்தில் காட்டுயிர் ஒரு துறையாக வளர்ந்திருக்கவில்லை. ஆகவே, இன்றிருப்பதுபோல முறையாகப் பயிற்சி பெற்ற காட்டுயிரியலாளர்களும் இல்லை.

பல்லுயிரியத்தின் குறியீடு

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நீண்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகடுகளில் உள்ள ஓரிடவாழ்வியான  வரையாடு,  இந்தப் பகுதியின் பல்லுயிரியத்துக்கு ஒரு குறியீடு. நெடிதுயர்ந்த மலைகளிலுள்ள இந்த விலங்கின் வாழிடத்தில்தான் குறிஞ்சி மலர்கிறது. அமராவதி போன்ற நதிகளும் உற்பத்தியாகின்றன. கரும்வெருகு போன்ற மற்ற ஓரிடவாழ்விகளுக்கும் இது உறைவிடம்.

முதலில் அவை எத்தனை இருக்கின்றன என்று கணக்கெடுக்க ஆரம்பித்தார், தென்னிந்தியத் தேயிலைத் தோட்ட உரிமையாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த டேவிடார். எனவே, அந்தப் பகுதியின் நில அமைப்பை நன்கு அறிந்திருந்த தேயிலைத் தோட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பு இவருக்குக் கிடைத்தது.  கைப்பேசி, ஜி.பி.எஸ். போன்ற வசதிகள் இல்லாத காலத்தில்  பல இடங்களுக்குத் தனியாகச் சென்று, கூடாரமிட்டுத் தங்கி, வரையாடுகளைப் பற்றி ஆய்வு செய்தார்.

ஒரு முறை காட்டில் தனியாகச் சுற்றிக்  கொண்டிருந்தபோது காட்டுமாடு ஒன்றால் அவர் தாக்கப்பட்டார். அதைப் பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “காட்டுமாடு என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தது. என்னை முட்டிக் குத்தியது. மேலே தூக்கி எறிந்தது. மிதித்தது” என்று குறிப்பிட்டிருந்தார். பலத்த காயங்களுடன் சாலைக்கு எப்படியோ வந்து, அவர் உயிர் பிழைத்தார்.

அமெரிக்கரின் ஆய்வு

வரையாடு பற்றி சஞ்சிகைகளில் வெளியான இவரது கட்டுரைகள், பன்னாட்டு உயிரியலாளர்களின் கவனத்தை ஈர்த்தன. அவர்களில் ஒருவர் அமெரிக்கக் காட்டுயிரியிலாளர் ஜார்ஜ் ஷேலர். அரிய, அற்றுப்போகும் நிலையிலிருக்கும் உயிரினங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது இவர் வழக்கம். 1969-ல் இவர் எழுதிய ‘மானும் புலியும்’ (The Deer and the Tiger)  என்ற ஒரு மகத்தான நூல்தான், இந்தியக் காட்டுயிர் ஆபத்தான நிலையில் இருப்பது பற்றி அபாயச் சங்காக ஒலித்தது.

அவர் குன்னூர் வந்து, டேவிடாருடன் தங்கி வரையாடுகளின் உறைவிடங்களைப் பார்வையிட்டார். பின்னர் அவர் வெளியிட்ட ‘அமைதியின் பாறைகள்’ (Stones of Silence) எனும் நூலில் டேவிடாரின் முயற்சிகளைச் சிலாகித்து எழுதினார். டேவிடாரின் அவதானிப்புகளால் உந்தப்பட்டு ஐ.யூ.சி.என். (IUCN) என்றறியப்படும் இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம், அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் (Red Data Book) வரையாட்டைச் சேர்த்தது. அரசும், வரையாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்தியது. இந்த விலங்குக்கென நீலகிரி மாவட்டத்தில் 80 சதுர கி.மீ. பரப்புடைய முக்குர்த்தி தேசியப் பூங்கா அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த விலங்கைப் போற்றி  புத்தாயிரத்தில் ஒரு தபால் தலையை வெளியிட்டது.
 

vaangame-2jpgடேவிடார்.

அணையால் மறைந்த மீன்

தூண்டில் போட்டு மீன் பிடிப்பதில் மிகுந்த ஆர்வமுடைய டேவிடார், இந்த மலைப் பகுதிகளில் உள்ள மீன்களைப் பற்றி நல்ல பட்டறிவு கொண்டவர். அமராவதியில் நிறைய மயில்கெண்டை மீன்கள் இருந்ததைப் பதிவு செய்திருக்கும் இவர், இந்த நதியின் குறுக்கே அணை கட்டப்பட்ட பின் அந்த எழிலார்ந்த மீன் மறைந்துவிட்டது பற்றி வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.

1981-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், முதுமலைக்கு அருகே ஒரு பண்ணை வீடு கட்டி அங்கே அடிக்கடி தங்கிவர ஆரம்பித்தார் டேவிடார். காட்டுயிர் பற்றித் தனது அனுபவங்களை ‘தி சீத்தல் வாக்’ (The Chital Walk)    என்ற நூலில் பதிவுசெய்தார். சிறுவர்களுக்காக சில அருமையான கட்டுரைகள் அடங்கிய நூல்களை வெளியிட்டார். ஒரு கட்டுரையின் தலைப்பு ‘கழுதைப்புலி ஏன் சிரிக்கிறது?’.

அதே காலகட்டத்தில் காடுகளைச் சுற்றி அங்கே நடமாடிக்கொண்டிருந்த மொழுக்கன் என்றறியப்பட்ட வீரப்பனைப் பற்றிப் பல கதைகளைத் திரட்டி  ‘தி ஜங்கிள் டேல்ஸ்’ (The Jungle Tales) என்ற தலைப்பில் ஒரு நூலை, வீரப்பன் உயிருடன் இருக்கும்போதே எழுதினார். இந்த நூலுக்குச் சரியான கவனிப்புக் கிடைக்கவில்லை. அதற்கு, பதிப்பகம் நூலின் பெயரை மாற்றியது ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன். டேவிடார் கொடுத்திருந்த தலைப்பு ‘தி நைட் ஆஃப் தி டஸ்கர்’ (The Night of the Tusker).

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com
| படம்: நித்திலா பாஸ்கரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x