Published : 24 Nov 2018 11:32 AM
Last Updated : 24 Nov 2018 11:32 AM

கஜ தாண்டவம்

சுனாமி அளவுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் இப்போது இல்லை. அதனால் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஒன்றுமே இல்லை என்று சொல்ல முடியாது. ஒரு பெரியவர் எங்களிடம் சொன்னார்: “உயிர் மட்டும்தான் இன்னும் மிச்சமிருக்கிறது. அதுவும் போயிருக்கலாம்".

சில நாட்களுக்கு முன்னர் வேதாரண்யம் அருகே கற்பகநாதர்குளம் என்னும் ஊரில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அழகிய‌ தென்னந்தோப்புக்குள் இருக்கிறது அவரது வீடு. ஒரு பெரிய இளநியை வெட்டி எடுத்து வந்த அவருடைய தந்தை என்னிடம் கொடுத்துப் பருகச் சொன்னார். நேற்று அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீடு மட்டும் தனிமரமாகக் காட்சியளித்தது. இளநீர் கொடுத்த மரங்கள் அதுவும் இன்று இல்லை.

“இறந்து போன மனித உடல்களைக்கூடச் சடலங்களாக அப்புற‌ப்படுத்தி விடுவோம். இப்படி வீழ்ந்து கிடக்கும் எங்கள் தென்னம்பிள்ளைகளை  எப்படி அகற்றப் போகிறோம்?” என அவர் வேதனையில் விம்மினார். எங்களுக்கும் நெஞ்சுக்குழி அடைத்துப் போனது. மரங்களின் மரண ஓலம் டெல்டாவெங்கும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

கஜா புயல் டெல்டாவைத் துவம்சம் செய்துவிட்டுப் போயிருக்கிறது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. சாலைகளின் ஓரங்களில் இருந்த மரங்கள் இன்று இல்லை. சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த அழகிய தென்னந்தோப்புகள் அழிந்துபோய்விட்டன‌. அழகான‌ ஊர்ப்புறங்கள் இன்று அலங்கோலமாகக் காட்சி தருகின்றன. இயற்கை தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் என்று படித்திருக்கிறேன். இப்போது அதை நேரில் பார்க்கிறேன்.

அரசு செய்தது என்ன?

கஜா புயலை நன்றாகத்தான் எதிர்கொண்டது தமிழக அரசு. சமூக ஊடகங்களில் உலவிய பகடியான மீம்களைக் கடந்தும், அதைக் கொஞ்சமும் சட்டை செய்யாமலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. புயல் கட்டுப்பாட்டு அறை கிரிக்கெட் மைதானம் போலவே காட்சியளித்தது. ஆட்டத்தின் முதல் பாதியை அரசு சரியாகவே விளையாண்டது. ஆனால், மறுபாதியைச் சரியாகக் கையாளவில்லையோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

புயல் வீசுவதற்கு முன்னர் அரசு எடுத்த நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளால்கூடப் பாராட்டப்பட்டன. அதனால் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டன. உண்மைதான். ஆனால் புயலுக்குப் பிறகு அதே தீவிரத்தை அரசு காட்டவில்லை.

புயல் ஏற்படுத்தியுள்ள சேதங்களுக்குப் பின்னால் சில அதிசயங்களையும் உற்று நோக்க முடியும். குடிசை வீட்டுக்காரர்களின் ஒற்றை மாமரம் மட்டுமல்ல‌. செல்வந்தர்களின் தென்னந்தோப்புகளும் அழிந்து போயிருக்கின்றன. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்திருக்கின்றன. கஜா புயலின் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க‌ இளைஞர்கள் இரவு பகல் பாராமல் நிவாரணப் பணிகளைச் செய்து  வருகிறார்கள். இக்காட்சிகளை நேரடியாகக் களத்திலும் காணமுடிந்தது.

ஏன் விழுந்தன மரங்கள்?

மரம் வளர்ப்பது இயற்கைக்கு உவப்பானதாக இருக்க வேண்டும். பழங்காலத்தில் மரம் வளர்ப்பதற்கென்று ஒரு முறை இருந்தது. ஒரே மர வகையினத்தைப் பரந்த நிலப்பரப்பில் பயிரிடாமல் பெரும் மரங்களுக்கு இடையே சிறு மரங்களைப் பயிரிடுவது  என்னும் வழக்கம் இருந்தது. தாவர வளர்ப்பிலும் பன்மைத்துவத்தைப் பேணிக் காத்தனர் நம் மூதாதையர்.

இதனால் காற்றின் வேகத்திலிருந்து சிறு மரங்களைப் பெரிய மரங்கள் காத்தன‌. மரங்களைப் பணம் காய்க்கும் இயந்திரங்களாக மாற்றிவிட்ட பிற்பாடு, இது போன்ற பாரம்பரிய பழக்கங்களும் மறைந்து போயின. அதனால்தான் தென்னந்தோப்புகளின் சேதங்கள் மரங்களாக அல்லாமல் மாதத்திற்கு இத்தனை லட்சம் இழப்பு என்பதாகப் பேசப்படுகிறது.

நம் தென்னை விவசாயிகளை எப்படி மீட்டெடுப்பது?  நீண்ட காலத்துக்கான  திட்டமிடுதல்கள் முதலில் அவசியம். நம் நிலத்திற்கேற்ற பாரம்பரிய முறையில் மரங்களைப் பயிரிட்டு, நவீனப் பாசனத் தொழில்நுட்பங்களை அதில் செயல்படுத்துவதன் மூலம், நிகழ்ந்துபோன பேரழிவிலிருந்து நம் விவசாயிகளை விரைவில் மீண்டெழச் செய்ய முடியும்.

கேள்விக்குறியான வாழ்வாதாரம்

தென்னைத் தொழில் டெல்டா மக்களின் முக்கியமான வாழ்வாதாரம். அதைச் சார்ந்து வாழ்ந்துவரும் பல்லாயிரக்கணக்கான‌ தென்னைத் தொழிலாளிகளின் எதிர்கால வாழ்வாதாரம் குறித்து அச்சம் ஏற்படுகிறது. காவிரி நீர் பொய்த்துப் போனதால் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் திருப்பூருக்கும் சென்னைக்கும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் கஜா புயலின் கடுந்தாக்குதலால் காவிரிப் படுகையிலிருந்து மேலும் இடப்பெயர்வுகள் நடக்கும்.  கடந்த இருபது ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் சேர்த்துத் தென்னைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் டெல்டா இளைஞர்களின் வாழ்வாதாரமும் பாழ்பட்டுப் போயிருக்கிறது. ஒரு நிலத்தின் பொருளாதார வாழ்வு தாழும்போது அந்நிலத்தின் பண்பாட்டு வளர்ச்சிகளும் பாதிக்கப்படும். அதனால்தான் கஜா புயல் டெல்டா மக்களின் வாழ்நிலையைத் துவம்சம் செய்திருக்கிறது என்று சொல்கிறோம்.

டெல்டாவின் பொருளாதாரம் இருபது ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து என்னசெய்வது என்பதறியாமல் மக்கள் உறைந்திருக்கிறார்கள். அவர்களின் உடனடி உயிர்வாழ்வுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் வரத் தொடங்கிவிட்டன.

சேதமடைந்த கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் மழை மேகத்தைக் கண்டு அஞ்சிக் கொண்டிருக்கின்றன. மக்களை மீட்டெடுக்க, எதிர்காலம் குறித்த நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த அரசால் மட்டுமே முடியும். அது நடக்குமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: c.shanmughasundaram@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

 
x