Published : 10 Nov 2018 12:02 PM
Last Updated : 10 Nov 2018 12:02 PM

பசுமை எனது வாழ்வுரிமை 05: அழிந்துபோன முல்லைக் காடுகள்!

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிக அதிக அளவு இயற்கை மூலப் பொருட்களின் சுரண்டலும் பயன்பாடும் அவற்றின் மேலாண்மையில் மட்டுமின்றி, கட்டுப்பாட்டு வகைகளிலும் அதிக அளவு திடீர் மாற்றங்களை மேற்கொள்ளத் தூண்டின.

இதனால், இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று, வேளாண் நிலப் பகுதிகளை அதிகரித்து, அவற்றின் மேல் அதிக வரிகளைச் சுமத்தியது. இரண்டு, காட்டுப் பகுதிகளை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இங்கே காட்டுப் பகுதிகள் என்று குறிப்பிடப்படுபவற்றில் மலைகளில் காணப்படும் குறிஞ்சி நிலக்காடுகள் மட்டுமின்றி, சமவெளிப் பகுதிகளில் காணப்பட்ட முல்லை நிலக் காடுகளும் (அதாவது, சவான்னா எனப்படும் சிறுமர மற்றும் புதர்க்காடுகள்) அடங்கும். காலனி ஆதிக்க பிரிட்டிஷ் அரசு தன்னுடைய ‘உரிமைகளை’ வலியுறுத்துவதற்காக இயற்கை மூலப்பொருட்களின் மேலாண்மையின் மேல் மிகவும் இறுக்கமான சட்டம் மற்றும் நிர்வாகக்  கட்டமைப்பைக் கொண்டு வந்தது.

தடையான குறிஞ்சி நிலக்காடுகள்

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காட்டியலின் (ஃபாரஸ்ட்ரி) தவிர்க்க முடியாத தன்மைகள், அடிப்படையில் வணிகரீதியானவை என்பது அதன் சட்டத் திட்டங்களாலும் கட்டுப்பாடுகளாலும் நன்கு நிறுவப்பட்டுள்ளன. இந்தச் சட்டத் திட்டங்களும் கட்டுப்பாடுகளும் இவை தொடர்பான அரசின் செயல்பாடுகளும் விசாலமான சமுதாய அல்லது சூழல் அடிப்படைகளின் மேல் அமையாமல், காட்டில் உள்ள வெவ்வேறு தாவர, உயிரின சிற்றினங்களின் வணிக,  பயன்பாட்டு அடிப்படைகளால் உந்தப்பட்டன என்று இந்தியச் சூழல் வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிட்டிஷ் அரசு, குறிஞ்சி நிலக் காடுகளை, வேளாண்மை விரிவாக்கத்துக்கான ஒரு முக்கியத் தடையாகத்தான் கருதியது. ஏனெனில், வேளாண் விரிவாக்கத்தை மட்டுமே தன்னுடைய மிகப் பெரிய வருவாய் ஆதாரமாக அரசு கருதியது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, வேளாண் நிலங்களின் மேல் அதிக வரியை வசூலிக்க அது திட்டமிட்டது.

வணிகமான தேக்கும் மிளகும்

இதன் காரணமாக, காலனி ஆதிக்க ஆட்சியின்  தொடக்க காலத்தில், முல்லை நிலச் சமவெளிக் காடுகள் மிகப் பெரிய அழிவைக் கண்டன. காலனி ஆதிக்கத்துக்கு முன்பிருந்த 65 சதவீத இந்தியக் காட்டுப் பரப்பு

1850-ம் ஆண்டுக்குள் 45 சதவீதத்துக்குக் குறைந்தது. முல்லைக் காடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல இந்தியப் பகுதிகள் வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டு, இடத்துக்கேற்ப பல்வேறு பயிர்கள் வளர்க்கப்படுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.

1800-ம் ஆண்டு வாக்கில், பிரிட்டிஷ் அரசு, முதன்முறையாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளை உரிமை கொண்டாடி, அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியது. 1822-ம் ஆண்டுவரை ஏதோவொரு வகையில் இந்தக் காடுகளைப் பேண முயற்சி செய்து  அனுபவமின்மை காரணமாக, அதிக வெற்றி பெற முடியவில்லை. எனினும், ஆக்கிரமித்த காட்டுப் பகுதிகளில் தேர்ந்தெடுத்த மூலப்பொருட்களை மட்டும், வரம்பற்ற அளவில் பெற்று வியாபாரம் செய்தது. தேக்கும் மிளகும் அவற்றில் மிக முக்கியமானவை.

தவறான முடிவு

மேற்கூறப்பட்டது தொடர்பான ஒரு குறிப்பு: புச்சனன் என்பவர் 1870-ம் ஆண்டு எழுதிய ‘எ ஜர்னி ஃப்ரம் மெட்ராஸ் த்ரூ தி கண்ட்ரீஸ் ஆஃப் மைசூர், கேனரா அண்ட் மலபார்’ என்ற நூலில் காணப்படுகிறது. பிரிட்டிஷ் அரசு வடக்கு கேனரா பகுதியை 1799-ம் ஆண்டு தன் வசம் கொண்டு வந்தது.

1802-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் குறிஞ்சி நில மலைப் பகுதியில் மிளகு பயிரிடுவது போன்று நடிக்கும் ஜமீன்தார்கள் அங்குள்ள மரக்கட்டை நல்கும் மரங்களை, தங்களுடைய சொந்தச் சொத்து என்று உரிமை கொண்டாடுவது பற்றிக் குறிப்பிடுவதாக அந்தப் புத்தகம் சொல்கிறது.

வடக்கு கேனரா பகுதியின் காடுகளை பிரிட்டிஷ் அரசு ஆக்கிரமித்தது ஒரு பெரிய விபத்து என்றும், அது ஒரு தவறான ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும் கிளெக்ஹார் என்ற பிரிட்டிஷ் வனப் பாதுகாப்பு அலுவலரே ஏற்றுக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x