

வட்டார மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி இயற்கை மூலப் பொருட்களைச் சேகரித்தவர்கள், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த ஒரு பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின்கீழ் புதிய நிலப் பகுதிகளையும் காலனிகளையும் கொண்டுவர உதவினர். இதன் மூலம் அவர்கள் ஒரு மாற்றமடைந்த, அதிக அனுபவம் மிக்க, அதிக அறிவியல் சார்ந்த சாம்ராஜ்யத்தை நிறுவும் வழிமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
- டேவிட் மெக்காய்
இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் தொடக்ககாலச் செயல்கள் முல்லைக் காட்டுப் பகுதிகள் பலவற்றை வேளாண் நிலங்களாக மாற்றி, அதன் மூலம் வணிக அனுகூலங்களை அடைந்தது பற்றி நாம் முந்தைய அத்தியாயங்களில் கண்டோம். இதற்கு மற்றொரு காரணம் இந்திய மக்கள் தொகை, காலனி ஆதிக்கத்துக்கு முன்பிருந்த12 -15 கோடிலிருந்து ஏறத்தாழ 17 – 21 கோடி அளவுக்கு உயர்ந்தது.
கூடுதல் மக்கள்தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தி அதிகரிக்கப்பட்ட வேளாண் நிலங்களால் ஓரளவுக்கு ஈடுகட்டப்பட்டது. அதாவது, இந்தியாவின் நிலப் பயன்பாட்டுப் பாங்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. இது சூழலியல் பிரச்சினைகளையும் நிலப் பயன்பாட்டு உரிமைப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தின. என்றாலும், இதனால் ஏற்பட்ட தாக்கங்கள் அதிக அளவுக்கு வெளிப்படையாக, உடனடியாக உணரப்படவில்லை.
பயனடையாத கிராம மக்கள்
இதற்குக் காரணம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்துக்கு முன்பிருந்த இந்திய அரசர்களும் பயிர் நிலங்களின் வேளாண் அறுவடையில் கிடைத்த உபரி தானிய விளைச்சலைத்தான் குறிவைத்தனர். இதையேதான் பிரிட்டிஷ் அரசும் முதலில் தொடர்ந்தது. என்றாலும் சற்று அதிகமான வரி விதிப்புடன் கூடவே பிரிட்டிஷ் அரசு மற்றொரு புதிய செயலையும் புகுத்தியது.
வேளாண் நிலங்களில் தானியப் பயிர்களைத் தவிர பருத்தி, சணல், அவுரி (இண்டிகோ) போன்ற பணப் பயிர்களையும் அதிகமாகப் பயிரிட மக்களைக் கட்டாயப்படுத்தியது. இந்தப் பயிர்களின் விளைச்சலின் பெரும்பகுதி கிராமச் சூழலிலிருந்து, பல நேரம் நாட்டைவிட்டு, வெளியேற்றப்பட்டதால் கிராம மக்கள் அதிகமாகப் பயனடையாமல் பிரிட்டிஷ் அரசு அதிகப் பயனடைந்தது.
பாதுகாக்கப்பட்ட தேக்கு
நிலப் பயன்பாட்டுப் பாங்குகள் குறிஞ்சி நிலக் காட்டுப் பகுதிகளிலும் பிரிட்டிஷ் அரசால் மாற்றப்பட்டன. இது பற்றி முந்தைய அத்தியாயத்தில் சுருக்கமாகச் சுட்டப்பட்டது. குறிஞ்சி நிலக் காட்டியலில் பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் 1800 – 1806 காலகட்டத்தில் தோன்றியதாகக் கொள்ளலாம். 1806-ம் ஆண்டில்தான் காலனி அரசு மலபார் பகுதியிலிருந்த தேக்கு மரக்காடுகளைப் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முக்கியமான தேவைகளால் உந்தப்பட்டதாகும்.
இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் ஓக் மரக் காடுகளின் அழிவு ஏற்பட்டவுடன், இந்தியாவின் மேற்கு மலைத் தொடரின் தேக்கு மரங்கள் பிரிட்டிஷ் கப்பல்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கின. இந்தக் கப்பல்கள் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஏற்பட்ட போர்களில் பிரிட்டிஷ் அரசின் கப்பல் படையில் மிகவும் இவை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. இதைத் தவிர, பிரிட்டிஷ் அரசின் கடல்சார் வணிக விரிவாக்கத்துக்கும் கப்பல்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன.
காடழிப்பு ஏற்படுத்திய அழிவு
தேக்கு மரக்காடுகள், இமயமலைப் பகுதியின் தேவதாரு மரக் காடுகள் ஆகியவற்றின் மீது காட்டப்பட்ட இந்த ஆர்வம்கூட, காட்டு மேலாண்மை தொடர்பான காலனி ஆட்சியின் எந்தவொரு பொதுவான செயல் திட்டத்திலும் முடிவடையவில்லை. காடுகள், குறிப்பாக மரக்கட்டை மரங்களைக்கொண்ட காடுகள், சரியான கட்டுப்பாடுகள் இல்லாமல் விரைவாக அழியத் தொடங்கின. 19-ம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகளில் ரயில் பாதை வலை அமைப்பைக் கட்டமைப்புச் செய்யும் வரை இந்தச் செயல் திட்டத்தைத் தீட்டுவதற்குக் காத்திருக்க வேண்டியிருந்தது.
கட்டுப்பாடற்ற காடழிப்புச் செயல், முன்பு கிராமங்கள், பழங்குடி மக்கள் வசம் இருந்த காட்டுப் பகுதிகளில் அதுவரை நிலவிவந்த மூடிய ஆற்றலையும் பொருட்களின் சுழற்சிகளையும் பாதித்தது. பழங்குடிச் சமுதாயங்களின் ஒட்டிணைவைத் துண்டித்தது. தவிர, பயிரிடப்படாத குறிஞ்சிக் காட்டு மூலப் பொருட்களின் முறைப்படுத்தப்பட்ட பயன்பாட்டு மரபையும் அழித்தது.
(தொடரும்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in