

“இந்த உலகம் முதன்முதலாக அழிந்தபோது, நோவா தன் பேழைக்குள் எல்லா உயிர்களையும் வைத்தான். ஆனால், இந்தப் பூமியில் மீண்டும் உயிர்களை உயிர்ப்பிக்கச் செய்யும் மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவரங்களை அவன் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அப்போது மனித இனம், தாவரங்களை, உயிரினமாகக் கருதவில்லை!”
- ஆங்கில எழுத்தாளர் ரிச்சர்ட் பவர்ஸ் எழுதிய ‘தி ஓவர்ஸ்டோரி’ எனும் நாவலில் வருகிற கதாபாத்திரம் ஒன்று, இப்படிச் சொல்வதாக அமைந்திருக்கிறது. பைபிள் காலத்தை விடுங்கள். ‘வைஃபை’ காலத்திலும் நம்மில் எத்தனை பேர் மரங்களை உயிருள்ள ஒன்றாகக் கருதுகிறோம்?
அப்படி மரம் என்ன பயன்களை மனிதர்களுக்குத் தந்துவிடும்? இதற்கான பதில், ‘என்ன பயனைத்தான் மரங்கள் தரவில்லை?’ என்ற எதிர் கேள்வியாகவே இருக்கும். ஆம்… உண்ணும் உணவு முதல் உயிர் காக்கும் மருந்துகள்வரை மரங்கள் தரும் பயன்கள் ஏராளம், தாராளம். ‘உங்கள் கைகளில் மரக்கன்றை வைத்திருக்கும்போது கடவுள் வந்துவிட்டால், முதலில் மரக்கன்றை நட்டுவிடுங்கள், பிறகு கடவுளைச் சந்தியுங்கள்’ என்பார்கள். எத்தனையோ பழங்குடிகளின் கலாச்சாரத்தில் மரங்களே தெய்வங்களாகவும் இருந்து வருகின்றன.
மரங்களுடனான மனிதர்களின் தொடர்பை இதற்கு முன்பு ஓவியம், கவிதை, கட்டுரை போன்றவற்றில் கண்டிருக்கலாம். ஆனால், முதன்முறையாக அந்தத் தொடர்பை முழுமையாகச் சுவீகரித்திருக்கும் ஒரு நாவல் என்றால், அது இதுதான். நூலாசிரியரின் 12-வது படைப்பு இது. 2018-ம் ஆண்டுக்கான ‘புக்கர் பரிசு’ (வரும் 16-ம் தேதி வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்) இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ள 6 புத்தகங்களில் இதுவும் ஒன்று!
பசுமை படர்ந்திருக்கும் இலக்கியம்
அமெரிக்காவில், 19-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் இருந்து இப்போது வரையிலான காலகட்டத்தில் கதை நடப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ரூட்ஸ் (வேர்கள்), ட்ரங்க் (தண்டு), கிரவுன் (மர உச்சி) மற்றும் சீட்ஸ் (விதைகள்) என்று நான்கு பகுதிகளாக நாவல் பிரிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தலைப்புகளுக்கு ஏற்றபடி, கதாபாத்திரங்கள் அறிமுகம் (நாவலின் முதல் 150 பக்கங்களை, இந்தக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவே ஒதுக்கியிருக்கிறார் நாவலாசிரியர்), பிரச்சினையின் பின்னணி, போராட்டத்தின் உச்சம் மற்றும் பிரச்சினைக்கான தீர்வு எனக் கதை, நகர்த்தப்பட்டிருக்கிறது.
ஓவியன், பெண் பொறியாளர், பெண் தாவரவியலாளர், முன்னாள் ராணுவ வீரர், போதைப் பொருளுக்கு அடிமையான கல்லூரி மாணவி ஒருவர், உளவியலாளன், ‘ஃபார்ம்வில்லே’, ‘போக்கிமான்’ போன்று மெய்நிகர் உலகத்தில் விளையாடும் கணினி விளையாட்டுக்களை உருவாக்கும் இந்தியன், அறிவுசார் சொத்துரிமையில் நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 9 கதாபாத்திரங்கள்.
இவர்களோடு, மரங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகின்றன. ‘மரங்களும் மனிதர்களும் ஒரே முன்னோரிடமிருந்து வந்தவர்கள்’ என்று சொல்லி, இயற்கையை, நாவலுக்கு இடையில், வாசிப்புச் சுவாரசியத்துக்காக இடைச்செருகலாகப் பயன்படுத்தாமல், தண்ணீருடன் கலக்கப்படும் நீர் வண்ணங்களைப் போலப் பிணைத்திருக்கிறார் ரிச்சர்ட் பவர்ஸ்.
அமெரிக்காவில் செம்மரங்கள் நிறைந்திருக்கும் வனம் ஒன்றை, கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தன் வணிகத்துக்காக அழிக்கத் திட்டமிடுகிறது. அதற்கு அரசும் துணை புரிகிறது. இதை எதிர்த்து, அந்த 9 பேர் போராடுகிறார்கள். அவர்களை மரங்கள் எப்படி ஒன்றிணைக்கின்றன என்பதை சுமார் 500 பக்கங்களில் இலக்கியம், சுற்றுச்சூழல், விஞ்ஞானம், கணினித் தொழில்நுட்பம், சமூகவியல் எனப் பல்துறை விஷயங்களைக் கலந்து கொடுத்திருக்கிறார் நூலாசிரியர்.
காடுகளா… கார்ப்பரேட் ‘பண்ணைகளா?’
‘தாவரங்களுக்கும் மனிதர்களைப் போலவே உணர்வுகள் உண்டு’ என்று இந்தியத் தாவரவியலாளர் ஜகதிஷ் சந்திரபோஸ் நிரூபித்தார். அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து, ‘தாவரங்கள், ஆபத்துக் காலத்தில் தங்கள் இனங்களுக்குள்ளேயே தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன’ என்று நிரூபிக்கப்பட்டது.
இப்படி உயிர்ப்புள்ள மரங்களை, அவை ‘பட்டுப்போய்விட்டன’ என்றும், ‘பட்டுப் போனதால், அவை எதற்கும் பயன்படாது’ என்றும், ‘ஒரு மரத்தை வெட்டினால், பத்து மரங்களை நட்டுச் சமாளித்துக் கொள்ளலாம்’ என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால், அவை எல்லாமே தவறான வாதம். எத்தனையோ நுண்ணுயிர்களுக்குப் பட்டுப்போன மரங்கள் வாழிடமாக உள்ளன.
பல்வேறு விதமான மரங்களைக் கொண்டதுதான் காடு. ஒரே விதமான மரங்கள் இருந்தால், அவற்றை ‘தோட்டங்கள்’ அல்லது ‘பண்ணைகள்’ என்று அழைக்க வேண்டும். ‘ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு நிகராகப் பத்து மரங்களை நடலாம்’ என்று கருத்து உடையவர்கள் எல்லாம், இம்மாதிரியான ‘ஒற்றைப் பயிர் முறை’யை ஊக்கப்படுத்துபவர்களாகவே உள்ளனர். அதற்குப் பின்பு, லாபம் பார்க்கும் வணிகம் இருப்பதை, ‘மரம் நடுவோம்; மழை பெறுவோம்’ என்று கூப்பாடு போடுகிற பலர் புரிந்துகொள்வதில்லை என்பதுதான் இந்த நாவல் சொல்ல வரும் செய்தி!
இன்னும் 12 ஆண்டுகள்…
புவி வெப்பமயமாதல் 2 டிகிரி செல்சியஸுக்கு மேலாகப் போய்விடக்கூடாது என்றும், அதை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும், இன்னும் 12 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸை எட்டிவிடுவோம் என்றும், அப்படி எட்டினால், அந்த அளவில் இருந்து வெறும் அரை டிகிரி வெப்பம் உயர்ந்தாலும்கூட அது பூமி அழிவதற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் என்றும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் பருவநிலை மாற்ற ஆய்வாளர்கள்.
புவி வெப்பமயமாவதற்கு முக்கியக் காரணம், கார்பன், மீத்தேன் போன்ற ‘பசுங்குடில் வாயுக்கள்’தாம். அந்த வாயுக்களைத் தங்களுக்குள்ளே ஈர்த்து சுத்தமான காற்றை வெளியிடும் தன்மை மரங்களுக்கு உண்டு. இப்படி வாயுக்களை மரங்கள் ஈர்ப்பதை ‘கார்பன் ஸீக்குவெஸ்ட்ரேஷன்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே, அதிக அளவில் மரங்களை நடுங்கள் என்கிறார்கள் அவர்கள். ஆனால், அதற்கு எதிராகச் செயல்படுகிறது வணிகமயமான உலகம்.
“இன்றுள்ள மரங்களில் பல, இயேசு பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கின்றன. ஆனால், அவற்றில் 97 சதவீத மரங்களை அழித்துவிட்டோம். மீதமுள்ள 3 சதவீத மரங்களையாவது நாம் காப்போமா?” என்று கேள்வி எழுப்புகிறது இந்நாவல். மேற்கண்ட விஷயங்களைப் பேசுவதால், ‘பருவ நிலை மாற்றம்’ சார்ந்த நாவலாகவும் இதைக் கொள்ளலாம்.
‘சொர்க்கத்துடன் தொடர்புகொள்ள பூமியின் இடையறாத முயற்சிதான் மரங்கள்’ என்கிறார் தாகூர். மரங்கள் இருந்தால் பூமியிலேயே சொர்க்கத்தைக் காண முடியும். மனிதர்கள் இல்லாமல் போனாலும், பூமி வாழும். அது மரங்களைப் போல வாழும்.
‘புக்கர் பரிசு இதற்குத்தான்’ என்ற பெரிய எதிர்பார்ப்பை இந்த நாவல் உருவாக்கியிருக்கிறது. பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்நாவலைப் படித்து மரங்களைக் காக்க யாரேனும் முன்வந்தால் அதுவே பெரிய விருதுதானே!
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in