

அயர்லாந்தில் கில்லார்னி என்ற ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தபோது, ஊருக்குச் சிறிது தூரத்தில் உள்ள ஒரு பண்ணையில் வல்லூறுகளை வேட்டைக்கு (Falconry) பழக்கும் இடம் உள்ளது என்றறிந்து ஒரு நாள் காலை அங்கு புறப்பட்டோம். இணைய மூலம் ஜோனதன் என்பவரிடம் தொடர்புகொண்டு இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தோம்.
அந்தத் தனியார் காட்டுக்குள் நுழைந்ததும் சாலையின் ஓரத்தில் அவர் எங்களுக்காகக் காத்திருந்தார். அவருடைய வேனின் பின்புறம் முழுவதும் வேட்டைப் பறவைகளுக்காகச் சிறுசிறு அறைகள் கொண்ட கூண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு கூண்டைத் திறந்து பெரிய சிவப்பு நிற வல்லூறு ஒன்றை லாவகமாக இடது கையில் ஏந்தியபடி வந்தார். கையில் தடித்த தோலாலான கையுறை அணிந்திருந்தார். ஓரமாக காரை, நிறுத்திவிட்டு காட்டுக்குள் அவரைத் தொடர்ந்தோம்.
தொன்மையான வேட்டை உத்தி
தொல்நெடுங்காலமாக மனிதர் சில இரைகொல்லி உயிரினங்களைப் பிடித்துப் பழக்கி, அதைக்கொண்டு வேட்டையாடி இருந்திருக்கின்றனர். முதலில் இறைச்சிக்காக நடத்தப்பட்ட இந்த வேட்டை, நாளடைவில் ஒரு சாகச விளையாட்டாகப் பரிணமித்தது. நம்நாட்டுக் குறுநில மன்னர் பலர் சிவிங்கிப் புலியைப் பழக்கி, வெளிமான், முயல் போன்ற விலங்குகளை அடித்தனர் (இன்று இந்த அருமையான பெரும்பூனை நம் நாட்டில் அற்றுப்போய்விட்டது!).
தாய்லாந்து மீனவர்கள் மீன்களைப் பிடிக்க நீர்நாய்களைப் பழக்கியிருந்தனர். ஜப்பானில் நீர்க்காக்கையின் கழுத்தில் ஒரு மோதிரம் போன்ற வளையத்தைப் பொருத்தி மீன் பிடித்தனர். இத்தகைய உத்திகளில் தொன்மையானது, நாலாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது - வல்லூறுகளைப் பிடித்துப் பழக்கி, முயல், கவுதாரி வேட்டைக்குப் பயன்படுத்துவது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவியிருந்த இந்தச் சாகசப் பொழுதுபோக்கு இப்போது அமெரிக்கா, பிரிட்டன் உட்பட ஐம்பது நாடுகளில் பிரபலம். சில ஆண்டுகளுக்கு முன் ‘யுனெஸ்கோ’ அமைப்பு, இதை ஒரு பொழுதுபோக்காக அங்கீகரித்தது. மங்கோலியாவில் பெரும் கழுகுகளை வேட்டைக்குப் பழக்கி, அதை ஏவிவிட்ட பின், குதிரையில் அதைத் தொடர்கிறார்கள்.
ஒரு வல்லூறை வளர்த்து, பயிற்சியளிப்பதற்கு மிகுந்த செலவாகும். அதனால்தான் இது ‘மன்னர்களின் விளையாட்டு’ என்றறியப்பட்டது. மொகலாயப் பேரரசர்கள் அவுரங்கசீப், ஜஹாங்கீர் போன்றவர்களுக்கு இந்த விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு. தர்பார் ஓவியரைத் தனது வல்லூறைச் சிற்றோவியமாக ஜஹாங்கீர் வரையச் செய்தார். எண்பதுகளில், சில அராபிய ஷேக்குகள் நம் நாட்டில் கட்ச் பகுதியில் வல்லூறுகளுடன் வந்து பறவைகளை வேட்டையாடினர் என்ற செய்திக்குப் பின் இந்த வேட்டை, இங்கே தடை செய்யப்பட்டது.
பூச்சிக்கொல்லியால் அழியும் பறவை
தமிழ்நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வகை வல்லூறுகள் உள்ளன. சில குளிர்காலத்தில் இங்கே வலசை வருகின்றன. இதில் நாம் எளிதாகக் காணக்கூடியது, பொறி வல்லூறு (Pregrine falcon). காடுகளில் உள்ள பரந்த நீர்நிலைகளில் இதைப் பார்க்கலாம். உயிரினங்களிலேயே வேகமானது என்றறியப்படும் இது, புல்லட்போல 400 கி.மீ. வேகத்தில் பறந்து வானில் பறவைகளைத் தாக்கும். பறக்கும் திறனும் வேட்டையாடும் உத்திகளுமே வல்லூறுகளின் முக்கியக் கூறுகள்.
நம் ஊர்ப் பறவை ஷாகின் வல்லூறு, பாறைகள் நிறைந்த குன்றுகளில் மனிதர் அண்ட முடியாத இடத்தில் வசிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜோடி, செஞ்சி மலையில் வசித்திருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எழுபதுகளின் நான் திருச்சியில் இருந்தபோது மலைக்கோட்டையின் தெற்குப்புறம் உள்ள பாறை இடுக்கில் இரு ஷாகின் வல்லூறுகள் இருந்தன. அவை அங்குள்ள பந்தயப் புறாக்கள் சிலவற்றை அடித்ததால், புறா வளர்ப்பவர் ஒருவர் அந்த இரண்டையும் சுட்டுக் கொன்றுவிட்டார்.
நம் நாட்டில் கடந்த சில பத்தாண்டுகளில் வல்லூறுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கியக் காரணம், பூச்சிக்கொல்லிதான். இரைக்கொல்லிப் பறவையின் உடலில் இந்த நச்சு சென்றடைவதால், அவை இடும் முட்டையின்
ஓடுகள் மிகவும் மெல்லியவையாக மாறி இனப்பெருக்கத்தைத் தடுக்கின்றன. முன்பு வயல்வெளிகளில் நாம் அடிக்கடி கண்ட செம்பருந்தும் இதனாலேயே மறைய ஆரம்பித்துள்ளது.
விமானத் துறையிலும் வல்லூறுக்கு வரவேற்பு
நாங்கள் அந்தக் காட்டுக்குள் நுழைந்தபோது லேசாக தூறிக்கொண்டிருந்தது. வல்லூறு அமர்ந்திருந்த கையை ஜோனதன் உயர்த்தியதும் வல்லூறு பறந்து உயரச் சென்று ஒரு பர்ச் மரத்தின் கிளையில் உட்கார்ந்தது. எனக்கு ஒரு கையுறை கொடுத்து அதில் ஒரு சிறு இறைச்சித் துண்டை வைத்துவிட்டு ஒரு ஒலி எழுப்பினார். வல்லூறு பறந்து வந்து என் மணிகட்டில் அமர்ந்து அந்த இறைச்சித் துண்டைத் தின்றது.
மிக அருகில் ஒரு இரைகொல்லிப் பறவையைப் பார்ப்பது அற்புதமாகயிருந்தது. நமது செம்பருந்தைவிடப் பெரிதான இந்தக் கழுகினத்தின் பெயர் ‘ஹாரிஸ் ஹாக்’ (Harris hawk). உடல் செங்கல் நிறமாகவும் வால் கறுப்பாகவும் இருந்தது. ஒளிரும் கண்கள். கம்பீரமான பார்வை. மிகக்கூர்மையான அலகு. அதேபோலக் கூரான கால் நகங்கள். கழுத்தில் தாயத்துபோல ஒரு ‘சிப்’ பொருத்தப்பட்டிருந்தது. அது பறந்து போய்விட்டால் தேடிப் பிடிக்கத்தான் இந்த சிப். பல நாடுகளில் இந்த விளையாட்டுக்காக வல்லூறுகள், காப்பிட இனப்பெருக்க (Captive breeding) முறையில் வளர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது.
சாகசத்துக்காக மட்டுமல்ல; விமானத் துறையில் மைனா, கொக்கு போன்ற பறவைகளை விமான தளத்திலிருந்து விரட்ட, இவை பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் பயணித்த விமானம் டப்ளினில் இறங்கி, ஓடுபாதையில் நகர்ந்துகொண்டிருந்தபோது, வல்லூறு போன்ற பட்டம் ஒன்று பறந்து கொண்டிருப்பதைக் கவனித்தோம். பறவைகளை விரட்ட வல்லூறு ஒன்றை வளர்ப்பது, செலவு மிகவும் குறைந்த உத்தி!
(அடுத்த கட்டுரை – நவம்பர் 10 இதழில்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com | படம்: நித்திலா பாஸ்கரன்