

காந்தியடிகள் ஒரு முறை அலகாபாத் நகரில் நேருவுடன் தங்கி இருந்தார். கங்கை, யமுனை என்ற இரண்டு பெரும் ஆறுகளும் கண்ணுக்குத் தெரியாமல் கற்பனையில் ஓடுவதாகக் கருதப்படும் சரஸ்வதி ஆறுடன் மூன்று ஆறுகள் பாயும் உயரிய பகுதி அது.
காலையில் வழக்கம்போல காந்தி எழுந்து, முகம் கழுவத் தயாரானார். நேரு அவருக்கு ஒரு வாளியிலிருந்து நீரை எடுத்து ஊற்றிக் கொண்டிருந்தார். விவாதம் ஆழமாகப் போய்க் கொண்டிருந்தது. நீரை எடுத்து எடுத்து நேரு பெருமான் விரைவாக ஊற்றிக்கொண்டே இருந்தார். காந்தி கைகளைக் கழுவிவிட்டு முகம் கழுவத் தயாரானபோது நீர் வாளியில் இல்லை. நேரு மற்றொரு வாளி நீரைக் கொண்டு வரத் தயாரானார்.
அப்போதுதான் காந்திக்குப் புரிந்தது, ஒரு வாளித் தண்ணீரையும் கைகழுவ நேரு ஊற்றிவிட்டார் என்பது. ‘அடடா, ஒரு வாளி நீரையும் நான் முகம் கழுவாமலேயே வீணாக்கிவிட்டேனே’ என்று வருந்தினார் காந்தி. அவர் கண்களில் நீர்த்துளிகள். அதைக் கண்டு அதிர்ந்த நேரு ‘இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று ஆறுகள் ஓடுகின்றன காந்தி! ஏன் கலங்குகிறீர்கள்?’ என்றார்.
‘நேரு அவர்களே! உங்கள் ஊரில் மூன்று பெரும் ஆறுகள் ஓடினாலும் எனக்கான பங்கு என்பது ஒரு காலைக்கு ஒரு வாளி நீர் மட்டுமே’ என்றார் காந்தி. காந்தியடிகளின் சூழலியல் பார்வைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு! இயற்கை வளங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அணுகுமுறையை அவர் காட்டியுள்ளார்.
ஆழமான பசுமைச் சிந்தனையாளர்
சூழல் மெய்யியல் துறையில் மிகவும் புகழ் பெற்றவர் ஆர்னே நாஸ் (Arne Naess). ஆழுமைத் திணையியல் (Deep Ecology – டீப் ஈக்காலஜி) கருத்தியலை உருவாக்கிப் பரப்பியவர் (ஆழுமை என்ற சொல்லை ஆளுமை என்று சிலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். ஆளுமை – பெர்சனாலிட்டி). தனது சிந்தனையைச் செதுக்கியதில் முக்கியமானவர்களில் ஒருவராக காந்தியடிகளைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்.
அவரது கோட்பாட்டின்படி இயற்கை வளங்கள், பிற உயிர்கள் யாவும் சமமானவை. மனிதனைவிட மற்ற உயிர்கள் உயர்ந்தவை ஒன்றும் இல்லை என்பதாகும். இந்த ஆழமான பார்வை வழக்கமான சூழலியல் சிந்தனையாளர்களிடம் இல்லை. அவர்கள் வெறும் பொருளியல் சார்புடன் இயற்கை வளங்களை, பிற உயிர்களை, மரத்தை, காடுகளைப் பார்க்கின்றனர். அதைத் தாண்டி ஒவ்வோர் உயிரினமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று பார்க்கத் தவறுகின்றனர். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால் காந்தியடிகளின் சூழலியல் பார்வை என்பது உயிர்மத் தொடர்புடைய பார்வை என்பது புரியும்.
எளிமையே பூமிக்கு நல்லது
ஆடம்பர உடைகளால் வீணாகும் ஆற்றலையும், அதன் சூழலியல் மதிப்பையும் நன்கு உணர்ந்தவர் காந்தி. பிறரது தேவையைத் தனக்கான பேராசைக்குப் பயன்படுத்தும் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிரானவன் என்ற தன் நிலையைத் தெளிவுபடுத்தவே அவர் அரையாடையைத் தேர்ந்தெடுத்தார். இந்தச் சிக்கனத்தைத்தான் காந்தி எளிமை என்றார்.
அவரது மிக அடிப்படையான கொள்கைகளில் ஒன்று எளிமை. எளிமை என்பதற்கும் ஏழ்மை என்பதற்கும் அடிப்படையான வேறுபாடு உண்டு. எளிமையை, ‘தன்னார்வமாக ஏற்கிற ஏழ்மை’ என்று கூறுவார்கள். அதாவது இயற்கை வளங்களை எவ்வளவு குறைவாக நுகர்கிறோமோ அவ்வளவு பூமிக்கு நல்லது.
சூழலியல் பாதுகாப்பில் எளிமை, மிக முக்கியமான கோட்பாடாகும். மிக எளிமையாக வாழும் பழங்குடி மக்களே உண்மையான சூழலியல் பாதுகாவலர்கள். எளிமையின் மகத்துவத்தை காந்தி மிக ஆழமாக நம்பினார். ‘இந்த உலகம் அனைத்து மக்களின் தேவையை நிறைவு செய்ய முடியும் ஆனால், ஒரு மனிதனின் பேராசையைக்கூட நிறைவு செய்ய இயலாது’ என்று காந்தியடிகள் குறிப்பிடுவார்.
பூச்சியும் பாம்பும் நல்லதே!
காந்தியடிகளின் மற்றொரு கொள்கை, அகிம்சை எனப்படும் இன்னா செய்யாமை. பிற உயிர்களுக்குத் தேவையற்ற துன்பத்தை விளைவிக்கக் கூடாது என்றவர். அதைத் தனது அரசியல் கோட்பாடாகவும் வகுத்தார். இன்று, பூச்சிகளை மனித குலத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ‘அவற்றை ஒழிக்கிறோம் பாருங்கள்’ என்று டன் கணக்கில் நஞ்சை, பூமி முழுவதும் கொட்டி, சூழலை நாசப்படுத்தியதன் விளைவை நாம் காண்கிறோம். தாய்ப்பாலில் நஞ்சு, சாப்பாட்டுத் தட்டில் நஞ்சு எனப் பெருநோயின் பிடியில் நமது தலைமுறை வாழ்கிறது.
வார்தாவில் உள்ள சேவாகிராமத்தில் ஒரு பழைய குச்சியும், ஒரு கூடும் இருக்கும். அந்தக் காலகட்டத்தில் அடிக்கடி ஆசிரமத்துக்குள் வரும் பாம்புகளைத் தொல்லைபடுத்தாமல் பிடித்து, அருகில் உள்ள காட்டுக்குள் விட்டுவிடுவதற்காக அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. பராமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்ற அத்வைதக் கருத்தியலின்படி உயிரினங்களைப் பார்த்த நிலை அவருடையது.
சிறியதே அழகு!
ஊரகமயமாதல் அல்லது கிராமங்களுக்கு உயிரூட்டுவது என்பது அவரது கொள்கைகளில் மற்றொன்று. தற்சார்புள்ள கிராமங்கள், இயற்கை எழில் மிக்க இடங்களாக இருக்கும். நகரங்கள் இன்று மிகப் பெரிய சூழல் கேட்டுக்கான காரணிகளாகத் திகழ்கின்றன. ஒட்டுமொத்த கிராம மக்களின் நீராதாரங்கள், உணவு ஆதாரங்கள் போன்றவை நகரங்களுக்காகக் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆற்றல் வளத்தை நுகர்ந்து, கரிமச் சுவட்டை விரிவாக்கி, நுகர்வு வெறியால் திளைக்கும் நகரங்களைத் துறந்து, சூழல் நேயமான கிராமங்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதே காந்தியின் கோட்பாடு.
சிறிய தொழில்கள், அதனால் ஏற்படும் குறைவான மாசுபாடு அல்லது சரி செய்யக் கூடிய மாசுபாடு என்பதே காந்தியின் நோக்கு. இதற்கு ‘நிலைபெறும் பொருளாதாரம்’ என்று குமரப்பா பெயரிட்டார்.
எந்திரங்கள் மனிதனுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டுமே அல்லாது, மனிதர்கள் இயந்திரங்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்பது அவரது கருத்து. உற்பத்தி என்பது பெருமளவாக இருக்க வேண்டியதில்லை, பெருமளவு மக்களால் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதும் அவரது கருத்து. சூழலை நாசப்படுத்தாத சிறு தொழில்களே இன்றைய உலகுக்குத் தேவை என்பது அவரது பார்வை. எனவே சூமேக்கர் போன்ற அறிஞர்கள் குறிப்பிடும் ‘சிறியதே அழகு’ என்பதன் மூலச் சிந்தனை வடிவமாக காந்தியடிகளைக் குறிப்பிடலாம்.
பன்மையம் போற்றிய பசுமைவாதி
சூழலியலில் பன்மையம் மிக அடிப்படையானது. காடுகளில் இருக்கும் மரங்கள் பல வகையாக இருக்கும்போதுதான் காடு, காடாக இருக்கும். இல்லையெனில் அது தோப்பாக இருக்கும். சாகுபடியில்கூட ஓரினச் சாகுபடிக்கு மாற்றாகப் பல பயிர் சாகுபடி முறையே சிறந்தது என்பது ஆய்வு முடிவு. ஓரினச் சாகுபடியில் நோய்களும்
பூச்சிகளும் பெருகி பெரும் சேதம் வரும். காந்தி, அந்தப் பன்மையத்தை மதித்தவர். அதனால்தான் பெண்களையும் தன் போராட்டங்களில் இணைத்தார். தாய்மையைச் சூழலியலின் அடிநாதமாகப் பார்த்தார். எனவே காந்தி, வழக்கமான பசுமைச் சிந்தனையாளரல்ல. அவர் ஓர் ஆழமான பசுமைச் சிந்தனையாளர் (டீப் ஈக்காலஜிஸ்ட்).
பவுத்த, சமண, பழங்குடிகளின் பார்வையுடனும், தமிழ்த் திணையியல் சிந்தனை மரபின் உச்சமான உயிர்ம நேயம், தற்சார்பு, இன்னா செய்யாமை, உயிரியல் பன்மையம் போன்றவற்றை உள்ளடக்கிய ஆளுமையாகவும் காந்தியடிகள் விளங்குவதால் பசுமைச் சிந்தையானர்கள் வரிசையில் அவரை வைப்பதில் குறை ஒன்றும் இல்லை!
கட்டுரையாளர், இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com