Published : 11 Aug 2018 12:36 pm

Updated : 11 Aug 2018 12:36 pm

 

Published : 11 Aug 2018 12:36 PM
Last Updated : 11 Aug 2018 12:36 PM

வாழ்வாதாரத்துக்கு ஒரு விதைத் திருவிழா

இயற்கை விவசாயம் பற்றிய பேச்சுகள் அதிகமாக எழத் தொடங்கி இருக்கும் இவ்வேளையில் அதுகுறித்த செயல்பாடுகளும் முன்னெப்போதையும்விடத் தீவிரமாக இப்போது முன்னெடுக்கப்படுகின்றன. ரசாயன உரங்கள், பூச்சிக் கொள்ளிகளின் பயன்பாடுகளால் நமது உடலும் நிலமும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழலில் இயற்கை விவசாயம். இயற்கை உணவுகள் ஆகியவை குறித்த பேச்சும் மக்களிடையே பரவலாகத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் பாரம்பரிய விதைகளைப் பற்றியும் நாம் பேச வேண்டும். பாரம்பரிய விதைகள் சேகரித்தல், அதை விருத்தி செய்து பாதுகாத்தல் போன்றவை இயற்கை விவசாயத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. இயற்கை உணவின் தேவை அதிகரித்திருக்கும் இவ்வேளையில் பாரம்பரிய விதைகளைப் பற்றிய புரிதல்களையும் விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக நீடித்த வாழ்வாதாரத்துக்கான நிறுவனம் (Sustainable Livelihood Institute) பாரம்பரிய விதைத் திருவிழாவை இரண்டாம் ஆண்டாக நடத்தியது.


புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்குத் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள், இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் ஆவலுடன் வந்து கலந்து கொண்டனர். கண்காட்சியில் 27 அரங்குகள் அமைக்கப்பட்டு 350க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள், இயற்கை வேளாண் பொருட்கள், இயற்கை இடுபொருட்கள், இயற்கைப் பருத்தி ஆடைகள், இயற்கைக் கைவினைப் பொருட்கள் என முற்றிலும் இயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஜீரோ வேஸ்ட் எனப்படும் மண்ணோடு மட்கக்கூடிய பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மண்ணின் ஊட்டச்சத்து, நீர் மேலாண்மை, சூழலியல், தோட்டக்கலை, பண்ணை அமைப்பு, உணவு பாதுகாப்பு, இயற்கை விவசாயம் எனப் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் உரை நிகழ்வும் இந்த விழாவில் முக்கியமானது. அவர்கள் இயற்கை விவசாயத்தின் அடிப்படைகளையும் செயல்பாடுகளையும் தங்கள் உரையின் மூலம் விளக்கினார்கள். இதன் வழியாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருபவர்களும் அதை முன்னெடுக்க விரும்புபவர்களும் பயனுள்ள பல செய்திகளைப் பெற்றுக்கொள்ள ஏதுவானதாக இந்தக் கருத்தரங்குகள் இருந்தன.

ஆக்கத்திற்குரிய எந்த ஒரு புதிய விஷயத்தையும் மாணவர்களிடம் விதைப்பதும், அது அவர்களிடம் இருந்து தளிர்த்து உருவாவதும் எதிர்காலத்தில் நல்ல விளைவுகளை உண்டாக்குவதற்கான ஏற்பாடுகள். பாரம்பரிய விதைத் திருவிழாவுக்கு இயற்கை விவசாயிகள், இயற்கை விவசாய ஆர்வலர்கள், துறை வல்லுநர்கள் மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் பள்ளியில் இருந்து மாணவர்கள் அதிலும் குறிப்பாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகளின் முக்கியத்தும் குறித்து மாணவர்களுக்கு அறிவியல்பூர்வமான செயல்பாடுகள் மூலம் மிக எளிமையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் அதில் பங்குபெற்றனர். அதுபோலவே முறையாக விதைபோட்டு செடி, மரம் வளர்க்க முடியாத இடங்களில் எல்லாம் விதைப் பந்துகளைத் தூவிவிட்டு வரும் முறையை மாணவர்களுக்கு விளக்கி விதைப் பந்துகளைச் செய்யச் சொல்லி ஊக்கம் கொடுக்கப்பட்டது.

இயற்கை விவசாயிகள், பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்த இந்த விதைத் திருவிழாவை ஒருங்கிணைத்த நீடித்த வாழ்வாதாரத்துக்கான நிறுவனத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன், “கடந்த ஆண்டு சிறு நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட இந்த விதைத் திருவிழாவுக்குக் கிடைத்த வரவேற்பால், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான ஒரு கண்காட்சியாக இரண்டாம் ஆண்டும் இதை நடத்தி இருக்கிறோம்.

இயற்கை விவசாயிகள், இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வம் கொண்டவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பார்வையாளர்கள் எனச் சுமார் 1,500 பேர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டிருக்கிறார்கள். உணவுப் பாதுகாப்பு என்பதில் இருந்து இப்போது ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். அதன் அளவில் இயற்கை விவசாயமும் நீர் மேலாண்மையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

vidhai 2jpg

துறை சார்ந்த வல்லுநர்களை அழைத்து நாள் முழுவதும் பல பகுதிகளாக இயற்கை விவசாயம், நீர் மேலாண்மை போன்ற தளங்களில் சிறப்பு உரைகளையும் ஏற்பாடு செய்திருந்தோம்” என இந்தக் கண்காட்சி குறித்துச் சொன்னார்.

இந்த நிகழ்வில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருப்பதுடன் கழிவு இல்லாத ஒரு நிகழ்வாக இது நடத்தப்பட்டிருக்கிறது. உணவு பரிமாறுவதற்காக உபயோகப்படுத்தப்பட்ட பாக்கு மட்டை தட்டுகள்கூட அந்த நிறுவனத்தின் மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டன. நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு மதிய உணவாக தினை, சாமை குதிரைவாலி அடங்கிய சிறுதானிய உணவு வழங்கப்பட்டது.

மருத்துவர்கள் சிலர் நிகழ்வின் ஒரு அங்கமாக மருத்துவ குணங்கள் கொண்ட செடிகள், விதைகளைப் பற்றிய சிறு கருத்தரங்கமும் கிருஷ்ணா மெக்கென்ஸியின் இசை நிகழ்ச்சியும் அடுத்த விதைத் திருவிழாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ராமசுப்பிரமணியன் சொல்கிறார்.


விதைத் திருவிழாஇயற்கை விவசாயம் Sustainable Livelihood Instituteபாரம்பரிய விதைத் திருவிழா ஆரோவில் நிகழ்ச்சி Zero waste

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x