

சென்னை: வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) வெளியேறிஉள்ளதாகவும், மின் கட்டமைப்பு அதிக கார்பன் அடர்த்தியானதாக மாறியுள்ளதாகவும் தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் கிரிஷ் பால்வே தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.ஹெச் இந்தியா லிமிடெட் நிறுவனம் சார்பில் நிலையான எரிசக்தி மாற்றம் குறித்த கருத்தரங்கம் சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. ‘பசுமைப் பொறியியலின் ஈடுபாடு’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு காலநிலை மாற்றத் திட்டத்தின் உதவி இயக்குநர் கிரிஷ் பால்வே பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின்படி, 2024-ல் இந்தியா தனது வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 57,700 மில்லியன் டன் கரியமில வாயுவை வெளியிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 7 சதவீதம் அதிகமாகும். இதற்கு நிலக்கரி சார்ந்த அனல் மின் நிலையங்களே 40 சதவீதத்துக்கும் மேல் காரணமாகும். நாட்டில் புதைபடிவமற்ற எரிசக்தி திறன் தற்போது பாதியளவை எட்டியுள்ளன. இருப்பினும், நமது மின் கட்டமைப்பு கணிசமான அளவில் அதிக கார்பன் அடர்த்தியானதாக மாறியுள்ளது.
அதன்படி 2020-க்கும் 2024-க்கும் இடையில், ஒரு மெகாவாட் மணி நேர மின்சாரத்துக்கு வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவு 0.703 டன்னில் இருந்து 0.727 டன்னாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், சூரிய மற்றும் காற்றாலைகள் 15 முதல் 25 சதவீதத்துடன் மட்டுமே செயல்படும் நிலையில், நிலக்கரி ஆலைகள் 65 முதல் 90 சதவீதம் வரை தொடர்ந்து இயங்குவதே ஆகும்.
இந்திய எரிசக்தி திறன் பணியகத்தின் திட்டங்கள் மூலம் 2017 முதல் 2023 வரை 1.29 பில்லியன் டன் கரியமில வாயு வெளியேற்றம் தவிர்க்கப்பட்டு ரூ.7.6 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. எனவே, எரிசக்தி திறன் தூய்மையான எரிசக்தி உத்தியின் மையமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் மணிப்பூர் ஐஐஐடி இயக்குநர் கே.பாஸ்கர், இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் முதன்மை ஆலோசகர் எஸ்.ரகுபதி, கேரள எரிசக்தி மேலாண்மை மையத்தின் இயக்குநர் ஆர்.ஹரிக்குமார், இந்திய பசுமைக் கட்டிட கவுன்சில் சென்னை தலைவர் எஸ்.மகேஷ் ஆனந்த், ஜி.எஸ்.ஹெச் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.நூருல் அமீன் பங்கேற்றனர்.