

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு மோசம் அடைந்துள்ள நிலையில் 6 அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் 24 மணி நேரத்தில் 60% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கு, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் ஒரு காரணமாக உள்ளது.
இந்நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கிரீம்ஸ் (CREAMS) ஆய்வகம் சேகரித்த தரவுகளின்படி, நவம்பர் 8-ம் தேதி வெறும் 24 மணி நேரத்தில், 6 மாநிலங்களில் பயிர்க் கழிவு எரிப்பு சம்பவங்கள் 60 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
செயற்கைக்கோள் ரிமோட் சென்சிங் தரவுகளின்படி, பஞ்சாப், ஹரியானா, உ.பி., டெல்லி, ராஜஸ்தான், ம.பி. ஆகிய 6 மாநிலங்களில் நவம்பர் 7-ம் தேதி 568-ஆக இருந்த பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் மறுநாள் 911-ஆக அதிகரித்துள்ளது.
நவம்பர் 8-ம் தேதி, ம.பி.யில் 353 இடங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பஞ்சாபில் 238, ஹரியானாவில் 158, ராஜஸ்தானில் 120, உ.பி.யில் 42 என இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தப் பருவத்தில் செப்டம்பர் 15 முதல் நவம்பர் 8 வரை மேற்கண்ட 6 மாநிலங்களில் மொத்தம் 8,365 பயிர்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் பஞ்சாபில் அதிகபட்சமாக 3,622 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பஞ்சாபில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதை அங்குள்ள ஆம் ஆத்மி அரசு கட்டுப்படுத்த தவறுவதாக டெல்லி பாஜக அரசு குற்றம் சாட்டுகிறது. பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க சில விவசாயிகளை பிடித்து சிறையில் அடைக்கலாம் என்றும் ஒருமுறை உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது.
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பதால் மக்களுக்கு கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட சுகாதார பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று காலை காற்று தரக்குறியீடு (ஏகியூஐ) 391 என்ற மிக மோசமான நிலையில் இருந்தது. காற்று தரக்குறியீடு 350-ஐ கடந்தால் 3-ம் நிலை கிராப் கட்டுப்பாடுகளை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை டெல்லி அரசு இதனை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.