

கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறையில் புளிப்புச் சுவையையும், இனிக்க வைக்கும் ‘மிராக்கிள் ஃப்ரூட்’ எனப்படும் அதிசயப் பழம் காய்த்துக் குலுங்குகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளம்ஸ், பேரிக்காய், அவகடா, பிச்சீஸ் உள்ளிட்ட பழ வகைகள் அதிகளவில் சாகுபடியாகின்றன. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கு விளையும் பழங்களுக்கு மவுசு அதிகம் என்பதால் ஏராளமான விவசாயிகள் கொடைக்கானல் தட்பவெப்ப நிலையில் விளையும் பழக்கன்றுகளைப் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் பிரவீன் என்பவர் தனது தோட்டத்தில் மேற்கு ஆப்ரிக்காவை தாயகமாகக் கொண்ட ‘மிராக்கிள் ஃப்ரூட்’ எனப்படும் அதிசயப் பழ மரத்தை வளர்த்து வருகிறார். தற்போது இந்த மரத்தில் சிவப்பு நிறத்தில் பழங்கள் காய்த்து கொத்துக் கொத்தாகத் தொங்குகின்றன. இந்தப் பழத்தை சாப்பிட்டவுடன் புளிப்பு, துவர்ப்பு சுவை கொண்ட எதைச் சாப்பிட்டாலும் இனிப்புத் தன்மை உடையதாக மாற்றும் திறன் இந்தப் பழத்துக்கு உண்டு. அதனால் பலரும் இந்தப் பழத்தை ஆர்வமுடன் பறித்து ருசிக்கின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, `கொடைக்கானல் மலையில் ஒரு சிலர் வெளிநாடுகளில் மட்டுமே விளையக்கூடிய பழக்கன்றுகளை நட்டு வளர்க்கின்றனர். அதுபோல், பேத்துப்பாறையில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘மிராக்கிள் ஃப்ரூட்’ பழக்கன்று வளர்க்கப்படுகிறது. தற்போது, அதில் நாவல் பழம் அளவில் சிவப்பு நிறத்தில் பழங்கள் காய்த்துக் குலுங்குகின்றன. இந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன், புளிப்புத் தன்மை கொண்ட எலுமிச்சம் பழம், ஊறுகாயைச் சாப்பிட்டாலும் புளிக்காது. மாறாக, தேன்போல இனிக்கும்', என்றனர்.