

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங்களுக்கான சுற்றுச்சூழல் விருதுகளுக்கு நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்’ என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக, 2024-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனி நபர்களுக்கான சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி விருதுகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தனி நபர்களுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள், சுற்றுச்சூழல் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்காக சுற்றுச்சூழல் மேலாண்மை விருதுகள், சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு வித்திடும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்கான விருதுகள் என 4 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
விருதுகளுடன் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்களாகவும், 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் 2024 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரையிலான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மட்டுமே குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் 2024-ல் வெளியாகி இருக்க வேண்டும். தகுதியான நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு tndoe@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியையும், 044-24336421 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.