

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் விதிகளை மீறி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு அதிகாரிகள் அனுமதி அளித்தது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சருக்கு பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கடிதம் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 3800 ஏக்கர் நிலப்பரப்பு, ராம்சார் தளமாக கடந்த 2022 ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சதுப்பு நிலப் பகுதியில் உள்ள 14.7 ஏக்கர் நிலத்தில், ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 1,250 வீடுகள் அடங்கிய பிரிகேட் மார்க் சென்டர் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.
மத்திய அரசின் அங்கீகாரமான ‘ராம்சர்’ அறிக்கையில் இடம் பெற்றுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியை பாதுகாப்போம், மேம்படுத்துவோம் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வரின் எண்ணத்துக்கு எதிராக, பெரும்பாக்கம் - பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை அழித்து, சட்டத்துக்குப் புறம்பாக, மத்திய அரசு விதிகளுக்கு மாறாக, முதல்வருக்கே தெரியாமல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, உண்மைகளை மறைத்து, மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற சதுப்பு நில பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்தது யார்?
அவசர அவசரமாக தமிழக சுற்றுச் சூழல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை, சிஎம்டிஏ உள்ளிட்ட அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் சட்டத்தை மீறி அனுமதி அளித்தது ஏன்? இதற்கு காரணமான ஐஏஎஸ் அதிகாரிகள் யார்? இத்திட்டத்துக்கு அனுமதி அளித்ததன் மூலம், எதிர்காலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 3 ஆயிரம் ஏக்கரும் ரியல் எஸ்டேட் சதுப்புநில ஊழல் முதலைகளால் கபளிகரம் செய்யப்பட்டு விடும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலின், தனது அறிவிப்புக்கு எதிராக, பிரிகேட் தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக, அனுமதி வழங்க காரணமான ஊழல் முதலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு கடிதம் எழுதி உள்ளேன். மத்திய அரசும், இது குறித்து விரைவில் விசாரணை செய்து, சென்னை மாநகர மக்களின் உயிரோட்டமான பறவைகள் சரணாலயமாக விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியை பாதுகாக்க தமிழக பாஜக முழு முயற்சியெடுக்கும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.