

கோவை: கோவை மாவட்டம் எட்டிமடை அருகே சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் தொடர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் எட்டிமடை பகுதியில் தனியார் தோட்டத்திற்குள் அக்டோபர் 22-ம் தேதி அதிகாலை நுழைந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்வி சென்றுள்ளது. இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறியது: “கோவை, மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, எட்டிமடை சுற்றுக்குட்பட்ட, எட்டிமடை பகுதியிலுள்ள ஹரிக்குமார் என்பவரது தோட்டத்தில் அக்டோபர் 22-ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் மர்ம விலங்கு ஒன்றை பார்த்ததாக தோட்டத்தின் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்ததில் வன விலங்கு ஒரு நாயை தூக்கி சென்றது உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் நாயின் உடற்பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக வைக்கவும், மேலும், இது போன்ற வன விலங்கு நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. சிறப்பு குழு அமைத்து, சம்பவ இடத்தில் தானியங்கி புகைப்பட கேமரா பொருத்தப்பட்டு தொடர் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று வன அவலுவலர் கூறினார்.