

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தின் கான்கே, ஆர்சந்தே மற்றும் துர்வா உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மாட்டு சாணத்தில் அகல் விளக்குகளை தயாரிக்கின்றனர்.
இந்த விளக்குகள் தலா ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையாகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த விளக்குகள், கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது.
இதுகுறித்து கான்கே நகரில் உள்ள ஒரு கோசாலையை நிர்வகிக்கும் சோனாலி மேத்தா கூறும்போது, “எங்கள் கோசாலையில் சுமார் 100 பெண்கள் மாட்டுச் சாண அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தினமும் 7 ஆயிரம் விளக்குகள் தயாராகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாராணசியிலிருந்து 3 லட்சம் விளக்குகளுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் தினமும் 400 விளக்குகளை தயாரிக்க முடியும். ஒரு விளக்குக்கு 0.75 பைசா அவர்களுக்கு கிடைக்கும்" என்றார்.