20 ஆண்டாக வளர்த்த மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்

20 ஆண்டாக வளர்த்த மரத்தை வெட்டியதால் மூதாட்டி கதறல்
Updated on
1 min read

புதுடெல்லி: சத்தீஸ்கரில் 20 ஆண்டுகளுக்கு முன் நட்டு வளர்ந்த அரச மரம் வெட்டப்பட்ட தால், அதன் அருகே மூதாட்டி ஒருவர் கதறி அழும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது என தெரிவித்து உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் கைராகர் மாவட்டம் சாரா கோண்டி கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி தியோலா பாய். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் தான் வசிக்கும் பகுதியில் அரச மரக் கன்றை நட்டு வளர்த்துள்ளார். அது தற்போது மிகப் பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அந்த மரம் தெய்வமாக வழிபடப்பட்டது போல் உள்ளது.

இந்நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக அந்த மரம், அடியோடு, வெட்டப்பட்டது. இந்த காட்சியை, அந்த மரத்தை நட்டு வளர்ந்த தியோலா பாய் பார்த்ததும், அந்த மரத்தின் அருகே அமர்ந்து, அதில் முட்டி கதறி அழுதார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியிருப்பதாவது:

இந்த காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது. மூதாட்டி ஒருவர் 20 ஆண்டுகளுக்கு முன், நட்ட அரச மரம் வெட்டப்பட்டுள்ளதை பார்த்து கதறி அழுகிறார். மரங்களுடன் மனிதர்களும் நேசமாக இணைந்தே உள்ளனர்’’ என கருத்து தெரிவித்துள்ளார்.

வைரலாக பரவியுள்ள இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த பலரும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ‘‘நாம் நட்டு வளர்க்கும் மரங்களும், நமது குழந்தைகள் தான்’’ என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in