

வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியப் பகுதிகளில் கடும் மழைப்பொழிவும், கடும் வறட்சியும் ஏற்படக்கூடும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள ஆசிய இதழியல் கல்லூரியில், காலநிலை மாற்றம் மற்றும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய புவி அறிவியல் அமைச்சக முன்னாள் செயலர் மாதவன் நாயர் ராஜீவன் பேசியதாவது: கால நிலை மாற்றத்தின் தாக்கத்தால் குறுகிய காலத்தில் அதிக அளவு மழை பொழிவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையில் 50 சதவீதம், குறுகிய காலத்தில், அதாவது 16 மணி நேரத்தில் பெய்துவிடுகிறது. இது 14 மணி நேரமாக குறைந்து விட்டது. வரும் காலங்களில் இன்னும் குறுகிய காலத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக ஆர்டிக் கடல் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி, மேற்கத்திய காலநிலை இடையூறுகளால், இந்திய பகுதிகளில் கனமழையாக கொட்டித் தீர்க்கிறது. வறட்சி, கடும் வெப்பம் போன்றவையும் ஏற்படுகின்றன. வரும் 2050-ல் ஆர்டிக் பகுதியில் உள்ள கடல் பனிப்பாறைகள் உருகி, இந்தியாவில் இயற்கைச் சீற்றம் தீவிரமாகும்.
வரும் காலங்களில் காலநிலை மாற்றத்தால் பருவமழைக் காலங்களில் இந்தியாவில் அதிகனமழை பெய்யும். குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும். கடும் வறட்சியும் நிலவும். அதன் விளைவாக, விளைச்சல் பாதிப்பு, மக்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ‘‘இந்திய வானிலை ஆய்வு மையத்தைவிட தனியார் ஆர்வலர்கள் சிறப்பான வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவது எப்படி? செயற்கை மழையால் பயன் உண்டா?’’ என்று மாணவர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘வானிலை தரவுகளை சேகரிக்க தனியார் ஆர்வலர்களிடம் சொந்தமான கட்டமைப்புகள் கிடையாது. அவர்கள் இந்திய வானிலை ஆய்வு மைய தரவுகளைத் தான் சார்ந்திருக்கின்றனர்.
‘அடுத்த 2 மணி நேரத்துக்கு மறக்காமல் குடையோடு செல்லுங்கள்’ என்று உள்ளூர் மொழியில் அவர்கள் பேசுவது மக்களுக்கு பிடித்திருக்கலாம். எனினும், அவர்கள் இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது. மகாராஷ்டிராவின் வறண்ட பகுதியான சோலாப்பூரில் கடந்த 2017-18 காலகட்டத்தில் மேக விதைப்பு (Cloud Seeding) முறையில் ரூ.200 கோடியில் செயற்கை மழை பெய்யவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் 17 சதவீதம் மட்டுமே கூடுதலாக மழை கிடைத்தது. எனவே, செயற்கை மழை பொழிவால் பெரிய பயன் இல்லை’’ என்றார்.
சுற்றுச்சூழல் தகவல்களை வெளியிடும் ‘மொங்காபே இந்தியா’ என்ற இணையதள நிறுவனத்தின் செய்திப் பிரிவு இயக்குநர் எஸ்.கோபி கிருஷ்ணா வாரியர், ஆசிய இதழியல் கல்லூரி முதல்வர் சசிகுமார், அசோகா பல்கலைக் கழக சுகாதார பகுப்பாய்வு ஆராய்ச்சி மைய இயக்குநர் பூர்ணிமா பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.