

சென்னை: ‘பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லையை ஒட்டிய, சதுப்பு நில தாக்கம் உள்ள 1 கி.மீ சுற்றுப்பகுதிகளுக்குள் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது’ என்று சிஎம்டிஏ உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகரில் எஞ்சி இருக்கும் சதுப்பு நிலமாக பள்ளிக்கரணை உள்ளது.
பல்வேறு ஆக்கிரமிப்புகளால் இதன் பரப்பளவு தற்போது 698 எக்டேராக சுருங்கிவிட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதி, ஈர நிலப்பகுதி (ராம்சார் தலம்) என அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சதுப்பு நிலத்தில் பெரும்பாக்கம் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.
இதுதொடர்பாக, வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலம் அடங்கிய ராம்சார் பகுதி மற்றும் அதைச் சுற்றிய ஒரு கி.மீ சுற்றளவுக்கு அதாவது ராம்சார் தாக்கப்பகுதியில் எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்று கடந்த செப்.24-ம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தற்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ அதாவது அரசங்கழனி, பெரும்பாக்கம், ஜல்லடியான் பேட்டை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, தரமணி, சீவரம், ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரிக்கு உட்பட்ட சதுப்புநில தாக்கப்பகுதிகளில் எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது என்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு தலைமை பிளானர் வாயிலாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் உத்தரவில் மேம்பாட்டுப் பணிகளுக்கான அனுமதி, ஒப்புதல் கூடாது என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டிட அனுமதியா, மனைப்பிரிவு மேம்பாட்டுக்கான அனுமதியா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
மக்களுக்கு பாதிப்பில்லாமல்... இந்த உத்தரவை சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தும் பட்சத்தில், சதுப்பு நிலப்பகுதியைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ சுற்றளவுக்குள் எந்த மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, மக்கள் பாதிக்கப்படாத வகையில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.