

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கழமை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். பின்னர் மீன்பிடித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
மீனவர்கள் வலையில் டூம்ஸ் டே (இறுதி நாள்) மீன் என்றழைக்கப்படும் அரிய வகை ஆழ்கடல் மீனான (Oar Fish) எனப்படும் துடுப்பு மீன் சிக்கியது. இந்த மீன் 10 கிலோ எடையும், 5 அடி நீளமும் உடையதாகவும் இருந்தது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் முதன்முறையாக இந்த மீன் பிடிபட்டதால் இந்த மீனை பாம்பன் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இது குறித்து மீன்வளத்றை அதிகாரிகள் கூறும்போது, “துடுப்பு மீன் (Oar fish) நீளமான மற்றும் சதைப் பிடிப்பற்ற பட்டையான ரிப்பன் போன்ற உடலமைப்புடன் ஆரஞ்சு நிற துடுப்புகளுடன் கூடிய மீன் இனமாகும். இவை மித வெப்ப மண்டல கடல் பகுதிகளிலும் அரிதாகவே காணப்படும். இவை அதிகப்பட்சமாக 16 மீட்டர் நீளம் வரையிலும் வளரக்கூடியது.
இந்த மீன் கரை ஒதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நீண்டக் கால நம்பிக்கை ஆகும். இதனால் இதற்கு 'டூம்ஸ் டே மீன்' என்ற பெயர் ஏற்பட்டது. ஆனால், இதற்கான அறிவியல் ரீதியான ஆதாரமும் இப்போது வரை இல்லை. அதனால், துடுப்பு மீன் பிடிப்படுவதோ அல்லது கரை ஒதுங்குவதால் பேரழிவு ஏற்படும் என்பது வெறும் மூட நம்பிக்கையே” என்று அதிகாரிகள் கூறினர்.