

நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிக்கரணை அணை ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேடிக்கை பார்க்காமல் உரிய நடவடிக்கையை சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, 49.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 1 ஏக்கரில் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இது சுற்றுவட்டார பகுதி நிலத்தடி நீருக்கு ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் ஏரியின் அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏரியில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.
ஏரியை சுற்றிலும் 10 கி.மீ. தூரத்துக்கு நிலத்தடி நீர் மோசமாகி மக்கள் மட்டுமின்றி ஆடு, மாடுகள் கூட குடிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கழிவு நீர் கலப்பதை தடுத்து ஏரியை பராமரிக்க சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.அற்புதராஜ் கூறியது: ஏரியின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விடுவதால். ஏரி கழிப்பிடமாக மாறிவிட்டது.
இந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஏரிக்கரையில் இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். இவை ஏரி நீரில் கலந்து விடுகிறது. ஏரி பகுதியில் நான்கு, இரு சக்கர வாகனங்களை கழுவுவது, மாடுகளை குளிப்பாட்டுவது, துணி துவைப்பது போன்றவை நடக்கின்றன. ஏரியைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஏரியில் கலக்கின்றன.
இதனால் ஏரி முழுமையாக மாசடைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, அண்மைக் காலமாக இறைச்சிக் கழிவுகள், வீடுகளின் குப்பைகள், தென்னை மரக் கழிவுகள், இளநீர் ஓடுகள், கரும்பு சக்கை கழிவுகள் உள்ளிட்டவையும் அணை ஏரியில் கொட்டப்படுகின்றன. இது குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
ஏரியில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியில் புகார் செய்யப்பட்ட போது பள்ளிக்கரணை வார்டு அலுவலகத்தில் இருந்து சுகாதார ஆய்வாளர் ஏரியை ஆய்வு மேற்கொண்டார். பிறகு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
தமிழக அரசு இதில் தலையிட்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தாவிட்டால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்களுக்கு நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, அந்த ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த, மாநகராட்சி நீர்வளத்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை அதிகாரி கூறுகையில், பள்ளிக்கரணை அணை ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏரியின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீரை சுத்திகரித்து ஏரியில் விடுகின்றனர்.
சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஏரிகளில் விடும் நீரை, முறையாக சுத்திகரிப்பு செய்து பின்னர் தான் ஏரிக்குள் விட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை யாரும் கடைபிடிப்பதில்லை. அரசு தான் இதற்கு தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.