

நீலகிரி மாவட்டத்தில் காணப்படும் அரிய வகை மலபார் அணில்கள் அழிவின் பிடியில் உள்ளதால், அவற்றை காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வனப் பெருக்கத்துக்கு காரணமாக உள்ள அணில்கள், உலக அளவில் 280 வகைகளும், நம் நாட்டில் 40 வகைகளும் உள்ளன. அதில், நம் மாநிலத்தில் மூன்று வகைகள் உள்ளன. குறிப்பாக, கிராமங்களில், பனை அணில், சாம்பல் நிற அணில், மலபார் அணில் ஆகியவை உள்ளன. சாம்பல் நிற அணில் தமிழகத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அதிகளவில் உள்ளதால் அங்கு சரணாலயம் அமைக்கப்பட்டு உள்ளது.
அணில் குடும்பத்தில் பெரியதாக காணப்படும், இந்தியன் மலபார் அணில்கள் செம்மை நிறத்தில் காணப்படும். இந்த அணில்கள், உயரமான மரத்தில் கூடு கட்டி வாழ்வதுடன், மரத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் மர பட்டைகள், இலைகளின் துளிர்கள், பறவைகளின் முட்டைகள் போன்றவற்றை உணவாக்கிக் கொள்கின்றன. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அதிக அளவில் காணப்பட்டு வந்த இந்த அணில்கள், வனங்கள் அழிவு மற்றும் மரக்கடத்தல் போன்ற காரணங்களால் உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் அழிந்து வருகின்றன.
நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார வனப்பகுதிகளில் குறிப்பிட்ட அடர் வனப்பகுதிகளில் மட்டும் இவை வாழ்ந்து வருகின்றன. வனப்பரப்பு குறைவதாலும், வாழ்விடங்கள் சுருங்குவதாலும் அணில்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
வன உயிரின ஆர்வலர்கள் கூறும் போது, ‘மலபார் அணில்கள் உட்கொள்ளும், பழங்களின் விதைகளை மண்ணில் போடுவதன் மூலம் வனப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பெருக்கம் அடையும். வன பாதுகாப்புக்கு துணை புரியும் மலபார் அணில்களை பாதுகாக்க மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
மனிதர்களிடம் பழகும் அணில்கள்: கூச்ச சுபாவம் உள்ள இந்த அணிகள் மனிதர்களை கண்டால் விலகி ஓடி விடும். இருப்பினும் குன்னூர் சிம்ஸ் பூங்கா பகுதியில் உள்ள பழக் கடைக்கு மலபார் அணிகள் ‘ரெகுலர் கஸ்டமராக’ மாறியுள்ளன. பூங்காவில் வெளிப்புறத்தில் பழக் கடை நடத்தி வருபவர்கள் முத்து லட்சுமி குடும்பத்தினர். இவர்களது கடைக்கு தினந்தோறும் மலபார் அணில்கள் வந்து பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். இதனை அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்து புகைப்படம் எடுத்துச் செல்வர்.
முத்து லட்சுமி கூறும் போது, ‘5 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு கடை அமைத்து சிறிது காலத்திற்குப் பின் மலபார் அணில் கடையின் மேல் பகுதியில் வந்தது. முதலில் பழங்களை வீணாக்கி விடுமோ என்ற அச்சத்தில் அதனை விரட்டி விட்டோம். அதன் பிறகு தினந்தோறும் காலை நேரத்திலேயே கடையின் மேலே வந்து நிற்க தொடங்கியது.
நாங்கள் முதலில் பழத்தைக் கொடுக்கும் போது அச்சத்துடன் கையிலிருந்து பிடுங்கி ஓடி விடும். சிறிது காலத்துக்கு பின்னர் எங்களது வளர்ப்பு பிராணி போல இந்த அணில்கள் அவ்வப்போது வந்து செல்ல தொடங்கின. தினம்தோறும் கடை திறந்த உடனேயே காலை நேரத்தில் போனி ஆகிறதோ இல்லையோ இவர்களுக்குத் தான் அன்றைக்கு முதல் பழம் கொடுப்போம். மொத்தமாக 12 அணில்கள் இருந்தன. நான்கு இறந்து விட்டன. தற்போது 8 அணில்கள் மட்டுமே இங்கு வாழ்கின்றன.
அவ்வப்போது வரும் அணில்களுக்கு நாங்கள் பழம் கொடுப்பதைக் கண்டு சுற்றுலாப் பயணிகளும் எங்களிடம் பழத்தை வாங்கி அணில்களுக்கு கொடுக்க முயற்சிப்பர். தினம்தோறும் நாங்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடும் அணில்கள் வேறு யாராவது கொடுத்தால் பழத்தை வாங்கிக் கொண்டு தரையில் போட்டுவிட்டு ஓடிவிடுகின்றன.
இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எங்களிடம் பழத்தை வாங்கி எங்களிடம் திரும்பக் கொடுத்து அணிலுக்குக் கொடுக்க சொல்கின்றனர். அதை அணில்கள் வந்து வாங்கிச் செல்வது அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த அணில்களுக்கு வாழைப்பழம், பட்டர் ஃப்ரூட், கொய்யா, ஸ்ட்ராபெரி போன்றவை மிகவும் பிடிக்கிறது’ என்றார்.