

புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை தடுக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறியதாவது: பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறைக்கு அனுப்பினால் அது எச்சரிக்கையாக அமையும். பயிர்க்கழிவுகளை எரிக்கும் விவசாயிகளைத் தண்டிக்கும் பிரிவுகளைக் கொண்ட சட்டத்தை ஏன் இயற்றக் கூடாது?
நமக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகளுக்கு நமது இதயத்தில் சிறப்பு இடம் உண்டு என்பதன் பொருள் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அவர்களை தண்டிக்கக் கூடாது என அர்த்தம் கொள்ளக் கூடாது. இதுகுறித்து அனைத்து தரப்பினரிடம் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். இல்லையென்றால் உச்ச நீதிமன்றமே உத்தரவிட நேரிடும். இவ்வாறு அவர் கூறினார்.