‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?

‘வயநாடு சம்பவம் போல...’ - தி.மலை.யின் 554 ஏக்கர் பகுதி குறித்த அறிக்கை சொல்வது என்ன?
Updated on
2 min read

சென்னை: வயநாடு சம்பவம் போல நிகழ்ந்து விடக்கூடாது என்ப தால் திருவண்ணாமலை மலை மற்றும் மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கர் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

பிரசித்தி பெற்ற திருவண்ணா மலை மலையை சுற்றிலும் உள்ள கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘அருணாச்சலேஸ்வரர் வீற்றிருக்கும் திருவண்ணாமலை மலை மிகப்பழமையானது மட்டு மின்றி, புனிதமானதும் கூட. 2 ஆயிரத்து 669 அடி உயரமும், 14 கிமீ சுற்றளவும் கொண்ட இந்த மலையில் பவுர்ணமி கிரிவலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை தரிசனம் செய்கின்றனர்.

இந்த கிரிவல பாதையில் ஆக்கிரமிப்புகள் புற்றீசல் போல் பெருகியுள்ளன. மலையிலும் பெரும்பாலான பகுதிகள் குடியிருப்பு கட்டு மானங்களால் ஆக்கிரமிக்கப் பட்டு சிமென்ட் சாலைகள், கழிப்பறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. மலையை சுற்றியிருந்த அடர்த்தி யான பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டு மானங்களுக்கு மின் இணைப்பும், குடிநீர் இணைப்பு களும் சட்டவிரோதமாக வழங் கப்பட்டுள்ளன. மலையை சுற்றிலும் வணிக நிறுவனங்கள் பெருகி கழிவுகள் கொட்டப்பட்டு கிரிவல பாதைகளில் துர் நாற்றம் வீசுகிறது. இந்த சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித் துள்ளனர். எனவே, திருவண்ணா மலை மலை மற்றும் கிரிவல பாதையில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்தாண்டு செப்டம்பரில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவல பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையி்ல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புகுழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டிருந்தனர்.

இ்ந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வழக் கறிஞர் யானை ராஜேந்தின், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் இன்னும் முழுமை யாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். அதற்கு அரசு தரப்பில் மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர் ஆஜராகி ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து, உயர் நீதி மன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலை மையிலான கண்காணிப்பு குழு தனது அறிக்கையை நீதி மன்றத் தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை நீதிபதிகள் படித்து பார்த்தனர். அதி்ல், திருவண்ணாமலை மலை மற்றும் கிரிவல பாதை யில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற அந்த பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மலையை சுற்றிலும் உள்ள வனப்பகுதிகளில் மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. இதனால், அவ்வப்போது பாறைகள், கற்கள் உருண்டு குடியிருப்பு களுக்குள் விழும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கேரளாவில் உள்ள வயநாட்டில் மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ள நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இங்கு நேர்ந்து விடக்கூடாது.

எனவே, திரு வண்ணாமலை மலை மற்றும் மலையை சுற்றிலும் உள்ள 554 ஏக்கர் பரப்பை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் வன விலங்குகளும் பாதுகாப்பாக இருக்கும். இதுதொடர்பாக ஏற்கெனவே வனத்துறைக்கும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

மலையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு வழங்கப் பட்டுள்ள மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண் டும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை இரு மாதங்களுக்கு தள்ளி வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in