

சென்னை: பேரண்டம் எப்போதுமே விந்தையானது. அந்த வகையில் இன்று (செப்.7) இரவு முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதுவொரு அரிய நிகழ்வு. இதை வெறும் கண்களில் மக்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள சூழலில் இந்நிகழ்வு இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் பார்க்க முடியும் என்பதை பார்ப்போம்.
நிலவுக்கு எப்போதுமே நம் வாழ்வில் தனித்த இடம் உண்டு. குழந்தைகள், பெரியவர்கள், கவிஞர்கள், விண்வெளி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் சந்திரனை சார்ந்து இருப்பது உண்டு. பகல் நேர பகலவனை காட்டிலும் இரவு நேர நிலவொளி பொழுது பலருக்கும் பிடிக்கும். கடற்கரையில் அமர்ந்தபடி நிலவை பார்த்து ரசிப்பது தனித்த அனுபவம். இரவு நேர வானம், விண்மீன் கூட்டம், அதற்கு மத்தியில் தவழும் வெண்மதி என அந்த காட்சியின் நிகழ் அனுபவம் அற்புதமாக இருக்கும்.
பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனின் வண்ணம் வெள்ளை நிறத்திலேயே பெரும்பாலும் தெரியும். இதற்கு காரணம் வளிமண்டல சூழல் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். சந்திரனின் அசல் நிறம் சாம்பல் என கருதப்படுகிறது. அதில் உள்ள இயற்கை வளங்கள் காரணமாக அதை பூமியில் இருந்து பார்க்கும் போது சில இடங்களில் கருமை நிறத்தில் தெரிகிறது.
ரத்த நிலா: சந்திர கிரகணம் காரணமாக இன்று பூமியில் இருந்து நிலவை பார்க்கும் போது ரத்த சிவப்பு நிறத்தில் சந்திரனை பார்க்கலாம். இதை Blood Moon என வானியல் ஆர்வலர்கள் வர்ணிக்கின்றனர். பொதுவாக பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. சூரிய ஒளி பூமி மீது விழுந்து செல்கின்ற காரணத்தாலும், வளிமண்டல அமைப்பு காரணமாகவும் இந்த நேரத்தில் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பிளெட் மூனை சுமார் 82 நிமிடங்கள் இன்று பார்க்க முடியும். அதாவது சரியாக இன்று இரவு 11.42 முதல் அந்த 82 நிமிடங்கள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு பார்க்கலாம்? - பூமியில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இதை வெறும் கண்ணால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மியான்மர், சீனா, தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, எகிப்து, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜெர்மனி, ரஷ்யா, தென் கொரியா, இத்தாலி, வங்கதேசம், ஹங்கேரி, பிலிப்பைன்ஸ், கிரீஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ருமேனியா, பல்கேரியா, ஜப்பான், துருக்கி, பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும்.
இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். சென்னை பிர்லா கோளரங்கம், புதுச்சேரி விமான நிலையம் அருகில் உள்ள ஹெலிபேட் பகுதியில் லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் சந்திர கிரகணம் முடியும் வரை இங்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.