

சென்னை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது சுற்றுச்சூழல் அழகையும், தூய்மையையும் பாதுகாக்கபொதுமக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை விநாயகர் சதுர்த்திக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களையே பூச வேண்டும். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும்.
சுற்றுசூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள், துணிகளை மட்டுமே பூஜைப் பொருட்களாக உபயோகப்படுத்த வேண்டும். துவைத்து மீண்டும் உபயோகிக்கக் கூடிய துணிகளையும், எல்இடி பல்புகளையும் அலங்காரத்துக்கு பயன்படுத்தலாம். பிரசாத விநியோகத்துக்கு மக்கும் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளையே உபயோகிக்க வேண்டும்.
விழா முடிந்தவுடன் பொறுப்புடன் குப்பையை பிரித்து அப்புறப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக், ரசாயனம் வேண்டாம் விநாயகர் சதுர்த்திக்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வகை சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது.
சிலைகளை அலங்கரிக்க சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பிளாஸ்டிக், தெர்மாகோல், ஃபிலமென்ட் பல்புகள், ரசாயனப் பொருட்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், சாயங்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தக் கூடாது. அதேபோல் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலால் ஆன பொருட்களை பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது.
பண்டிகையின்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக்கூடாது. குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்டக் கூடாது.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமிழகத்துக்கென நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. எனவே இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில், நமது சுற்றுச்சூழலின் அழகையும், தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.