

முதுமலை பந்திப்பூர் சாலையில் புகைப்படம் எடுக்க வந்தவரை காட்டு யானை விரட்டி தாக்கியதில், அந்நபர் படுகாயம் அடைந்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை-பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை இந்த சாலையில் நடமாடியது. சமீபத்தில் அந்த வழியாக கேரட் ஏற்றிச் சென்ற லாரியை, யானை வழிமறித்தது. ஓட்டுநரும் உடனே வண்டியை நிறுத்தினார். பின்னர், லாரியில் இருந்த கேரட்டை யானை ருசித்துக் கொண்டிருந்தது.
யானை கேரட் சாப்பிடுவதைக் கண்ட சுற்றுலா பயணி ஒருவர், ஆர்வமிகுதியில் அதனருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது, யானை அவரை விரட்டியது. உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்த சுற்றுலா பயணி, சாலையில் தடுமாறி விழுந்தார். யானை அவரை மிதித்து தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
தகவலின்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் காயம் அடைந்த சுற்றுலா பயணியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.