உத்தராகண்ட் திடீர் பெருவெள்ளத்துக்கு பனிக்கட்டி சரிவுதான் காரணமா?

உத்தராகண்ட் திடீர் பெருவெள்ளத்துக்கு பனிக்கட்டி சரிவுதான் காரணமா?
Updated on
1 min read

உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரளி கிராமத்தில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டு 20 கட்டிடங்கள் இடிந்ததற்கு, மிகப் பெரியளவில் ஏற்பட்ட பனிச்சரிவே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் உத்தரகாசி மாவட்டத்தின் கங்கோத்ரி அருகில் உள்ள தரளி கிராமத்தில் திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு மேக வெடிப்பு காரணம் என கூறப்பட்டது.

ஆனால், செயற்கை கோள் படங்களை ஆராய்ந்த நிபுணர்கள், இமயமலைப் பகுதியில் 360 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு பனிச் சரிவு ஏற்பட்டதே பெரு வெள்ளத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர். இது 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் நீச்சல் குளம் நிறைய மண், பாறை மற்றும் பனிக்கட்டிகளை ஒரே நேரத்தில் கொட்டினால் எந்த அளவுக்கு வேகமாக பாதிப்பு இருக்குமோ, அவற்றுக்கு நிகரானது என அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிகவும் சரிவான மலைப் பகுதியில் குவிந்திருந்த பனிக்கட்டி படிமங்கள் நிலச்சரிவுடன் கீர் காட் நீரோடையில் விழுந்ததால் தரளி கிராமத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டு மிகப் பெரியளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பனிச்சரிவு ஒரு சில விநாடிகளில் தரளி கிராமத்தை வந்தடைந்தால் 20 கட்டிடங்கள் தரைமட்டமாக 4 பேர் உயிரிழந்தனர்.

புவியியல் நிபுணர் இம்ரான் கான் கூறுகையில், “நீரோடைக்கு மேல் 7 கி.மீ தூரமும், 6,700 மீட்டர் உயரத்திலும் குவிந்திருந்த பனிக்கட்டி, தொடர்ந்த பெய்த கனமழையால் சரிந்து இந்த பேரிடரை ஏற்படுத்தியது” என தெரிவித்துள்ளார். டூன் பல்கலைக்கழக புவியியல் நிபுணர் ராஜீவ் சரன் அலுவாலியா கூறுகையில், “வினாடிக்கு 6 முதல் மீட்டர் வேகத்தில் மலை உச்சியில் இருந்து விழும் இடிபாடுகளுடன் கூடிய பனிக்கட்டிகள், வழியில் உள்ள எந்த கட்டிடங்களையும் தரைமட்டமாக்கும் திறன் கொண்டவை” என கூறியுள்ளார்.

இதனால்தான் கங்கோத்ரி போன்ற புனித தலம் அமைந்துள்ள மலைப் பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என புவியியில் நிபுணர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in