

சாலையோரம் உள்ள புற்களில் தீ வைப்பதால், நிழல் தருவதற்காக நடவு செய்யப்பட்ட மரங்கள் கருகி வருகின்றன. இதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் காற்று மாசடைந்து புதிய நோய்களுக்கு காரணியாகிறது. இதனை போக்கவும், சுகாதாரமான காற்று கிடைக்கவும், வெப்பத்தை தணித்து சுகமான பயணம் மேற்கொள்ளவும் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.
இந்த மரக்கன்றுகள் வளர்வதற்கு டிராக்டர் மூலம் தினந்தோறும் தண்ணீர் ஊற்றப்பட்டு வந்தது. அச்செடிகள் நன்கு வளர்ந்து மரமாகி விட்டால் தானாகவே மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் மரங்கள் வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.
இந்த மரங்களால் சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசடைந்த காற்று பரவாமல் கட்டுப்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு மாதகாலமாக அனல் காற்று கடுமையாக வீசி வருகிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளின் இரு புறமும் விவசாய நிலங்கள் உள்ளன.
நிலங்கள் அனைத்தும் உழவு செய்யப்பட்டு வரக்கூடிய புரட்டாசி பட்டத்துக்கு விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் சிலர் தங்கள் நிலங்களில் காய்ந்த சருகுகள், தட்டைகளை எரித்து வருகின்றனர். காய்ந்த தட்டைகள் எரிந்து சில சமயம் அவை காற்றுக்கு காட்டூத்தீயாய் மாறி சாலையோரம் நடப்பட்டுள்ள பசுமையான மரங்கள் மீது பரவுவதால் அவை பற்றி எரிகின்றன.
சில பகுதிகளில் சாலை வழியாக பயணிப்பவர்கள் புகை பிடித்துவிட்டு தீக்குச்சியை அணைக்காமல் அப்படியே போட்டுச் சென்று விடுகின்றனர். இதனாலும் பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டு நன்கு வளர்ந்த சாலையோர மரங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதனை நெடுஞ்சாலைத்துறை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறுகையில், “சாலையோரம் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரியும் போது அவ்வழியாக செல்ல முடியாத அளவில் புகைமூட்டம் ஏற்படுகிறது. சமுதாய பொறுப்பின்றி சிலர் செய்யும் செயலால் பல ஆண்டுகள் வளர்க்கப்பட்டு வந்த பசுமை மரங்கள் எரிந்து சாம்பலாக காட்சியளிக்கின்றன.
இதனை சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் கவனிப்பதில்லை. பொறுப்பற்ற செயலால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து சாலையில் ஆங்காங்கு விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும். சாலையில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பாக வேளைகளில் ஈடுபடும் விஷமிகள் மீது காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.