

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை விளாச்சேரியில் களிமண்ணாலான சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் மண்பாண்ட கைவினை கலைஞர்கள் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்.
இங்குள்ள தொழிலாளர்கள் பருவத்துக்கேற்றவாறு மண்பாண்டங்களில் பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். சமையலுக்கு பயன்படும் மண்பானை முதல் விநாயகர் சிலைகள், சிவன், பெருமாள், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமி சிலைகள், சுதந்திர போராட்ட தலைவர்கள் சிலைகளையும் களிமண்ணில் உற்பத்தி செய்து வருகின்றனர்.
மேலும் மரக்கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலமும் சிலைகளை செய்து வருகின்றனர். தற்போது ஆக. 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு களிமண்ணாலான விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் விற்பனையாளர்கள் வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் கைவினைக் கலைஞர்கள் உற்சாகத்துடன் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து விளாச்சேரியைச் சேர்ந்த கவுரி சங்கர் கூறுகையி்ல், ஆக. 27-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணில் விநாயகர் சிலைகள் செய்து வருகிறோம். தண்ணீரில் கரையும் வகையில் விநாயகர் சிலைகள் செய்துள்ளோம்.
தீயில் சுட்ட களிமண் சிலைகளும் உள்ளன. 3 அங்குலம் முதல் 3 அடி வரை சிலைகளை தயாரிக்கிறோம். சுடாத களிமண்ணாலான சிலைக்கும் வண்ணம் பூசி விற்பனை செய்கிறோம். ரூ.30 முதல் ரூ.200 வரை விநாயகர் சிலைகளை விற்பனை செய்கிறோம்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண்ணாலான பசுமை விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். தற்போது கண்மாய்களில் மண் எடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கிடைக்கவில்லை. கடந்தாண்டு அள்ளிய மண் மூலமே விநாயகர் சிலைகளை செய்து வருகிறோம்.
அனுமதி கிடைத்தால் கூடுதல் சிலைகள் செய்ய தயாராக உள்ளோம். அச்சுவார்ப்பு மூலம் சிலைகள் செய்து அதனை நிழலில் காயவைத்து வண்ணம் பூசி தயாராவதற்கு குறைந்தது 10 நாட்களாகும். அதன்படி முன்கூட்டியே பணிகளை தொடங்கியுள்ளோம் என்றார்.