

கோவை சாடிவயல் அருகே நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஒரு யானை விவசாயி கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஜே.சி.பி., புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டு மணி நேரத்திற்கு பின் கிணற்றுக்குள் இருந்து யானை உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. விவசாய கிணற்றில் யானை விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, “மத்வராயபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பல விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.