கோவை அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு: ஜேசிபி மூலம் உடல் மீட்பு

கோவை அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு: ஜேசிபி மூலம் உடல் மீட்பு
Updated on
1 min read

கோவை: கோவை அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் ஜே.சி.பி உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த சாடிவயல் அருகே நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. இது குறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், 35 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று விவசாயி கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

விவசாயி கணேசன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஜே.சி.பி, புல்டோசர் உள்ளிட்ட வாகனங்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பின் கிணற்றுக்குள் இருந்து யானையின் உடல் பத்திரமாக மீட்கப்பட்டது.

தொடர்ந்து உயிரிழந்த யானையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை குற்றாலம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விவசாயக் கிணற்றில் யானை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மத்வராயபுரம் கிராமத்தில கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களில் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பல விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in