

பூநாரைகள், நீர்ப் பறவையினங்களில் மிக அழகிய இனம். நாட்டிலேயே பெரும் பூநாரை (Greater Flamingo), சிறிய பூநாரை என இரு வகை பூநாரைகள் வாழ்கின்றன. இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும். பெரிய பூநாரைகள் நீண்ட சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், தடித்த வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும்.
நன்கு வளர்ந்த பெரிய பூநாரைகள் 4 அடி உயரம் இருக்கும். இவைகள் உப்புத் தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் தன்மை பெற்றதாக உள்ளது. இந்தியாவில் இவைகள் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் குறைந்த அளவு இனப் பெருக்கம் செய்து வாழ்கின்றன. ஆனாலும், பெரும்பாலான பூநாரைகள் ஆப்பிரிக்காவில் இருந்தும், மத்திய தரைக்கடல் நாடுகளில் இருந்தும் குளிர்காலங்களில் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளுக்கு வலசை வருகின்றன.
இந்தியாவைப் பொறுத்த வரையில் பெரிய பூநாரைகளை விட சிறிய பூநாரைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வருகின்றன. பூநாரைகள் நீரில் வாழும் சிறு நண்டு, கூனிறால்கள், நுண்ணுயிர்கள், மெல்லுடலிகள், நீர்த்தாவரங்களின் விதைகள், பாசிகளை உணவாக உட்கொள்ளும்.
மதுரை இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளையின் ரவீந்திரன் நடராஜனும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்கீழ் ஆய்வுசெய்து வரும் பைஜுவும் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தின் தென் மாவட்ட நீர் நிலைப் பகுதிகளிலும், கிழக்கு கடற்கரைப் பகுதிகளிலும் வாழ்விடப் பறவைகளின் இனப் பெருக்கத்தையும், வலசை பறவைகளின் வருகையையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக கணக்கெடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் பூநாரைகள் தமிழகத்தில் எதிர் கொண்டு வரும் வாழ்விடச் சிக்கல்களையும், குறைந்து வரும் எண்ணிக்கையின் விகிதம் குறித்த ஆய்வறிக்கையை நேபாள விலங்கியல் ஆய்விதழில் வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பெரிய பூநாரைகள் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் வலசை வந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எண்ணிக்கை, தற்போது கடும் வீழ்ச்சியை அடைந்து வருவது நமது தேசத்தின் சதுப்பு நிலப் பகுதிகளும், கடலின் தாழ்வான உப்பங்கழி முகப் பகுதிகள் வளம் இழந்து போவதையே சுட்டிக் காட்டுகிறது.
தமிழகத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரை, மாநில அளவில் இவைகள் ஆயிரக் கணக்கில் கூடும் இடமாக, பழவேற்காடு, கோடியக் கரை, வேதாரண்ய சதுப்பு நில பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள ராமேசுவரம், வாலிநோக்கம் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. வலசை செல்லும் காலங்களில், தமிழகத்தில் இவைகள் உணவுக்காகத் தங்கிச் செல்லும் இடங்களாக 22 நீர் நிலைகள் சார்ந்த பகுதிகளில் காணப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளில் பூநாரைகளின் எண்ணிக்கை, காலநிலை பிறழ்வால் கடல் நீரில் ஏற்படும் மாற்றங்கள், கடல் நீரின் வெப்பம் உயர்வதால் அவற்றின் உணவாதாரம் குறைந்து வருவது, விவசாய நிலங்களில் இருந்து வடிந்துவரும் நீரில் அமிலத் தன்மை அதிகரிப்பது , தாழ்வான கடற்கரையோரங்கள் பல உப்பளங்களாக லாப நோக்கில் மாற்றி வருவதாலும் கடும் வீழ்ச்சியை அடைவதற்கான காரணங்களாக அறியப் பட்டுள்ளன.
தமிழக அரசு ராமேசுவரம் கோதண்டராமர் கடற் பகுதியை பூநாரைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. ஆனாலும், இவை வலசை பறவைகள் என்ற காரணத்தால் இது போன்ற அரிய பறவையினங்கள் வந்து செல்லும் மதுரையின் சாமனத்தம், தூத்துகுடியின் முயல்தீவு, மரக்காணம் உப்பங்கழிகள், சுற்றுலாத்தலமாக கருதப்படு ம் மணக்குடி, முட்டுக்காடு போன்ற பகுதிகளும் பொறுப்பற்ற மனிதர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.