பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் - மத்திய அரசு விளக்கம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், "பருவநிலை மாற்றதால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயம், எரிசக்தித் திறன், பசுமை இந்தியா உள்ளிட்ட 9 முக்கிய துறைகளில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தூய்மை காற்றுத் திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 130 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளது. மத்திய மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கென ரூ. 13,036.52 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நீர், சுகாதாரம், விவசாயம், வனம், பல்லுயிர் பெருக்கம், எரிசக்தி, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற முக்கிய துறைகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பருவகால மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வலு சேர்க்க முடியும்.

சூரிய மின் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்யும் வகையில் தேசிய சூரியசக்தி இயக்கம் தொடங்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சூரிய மின் உற்பத்திக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டன. இதன்படி, ஜூன் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் 116.25 ஜிகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்திற்கு சூரிய மின் உற்பத்திக்காக ரூ. 38,420.82 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு ரூ. 31,483.86 கோடி. செலவு ரூ. 25,165.87 கோடி" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in