

அடையாறு ஆற்றில் தண்ணீரே தெரியாத அளவில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது. அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் நீரோட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கி மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக சென்னை கோட்டூர்புரம் அருகே அடையாறு ஆறு பட்டினப்பாக்கம் பகுதியில் கடலில் கலக்கிறது.
மொத்தம், 42 கி.மீ நீளம் கொண்ட அடையாறு ஆற்றில் ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணி நீர்வளத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகள் முழுவதும் தனி தீவாக மாறி வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு போதிய நிதியை ஒதுக்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், தற்போது அடையாறு தொடங்கும் இடம் முதல், கடலில் கலக்கும் இடம் வரை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது.
இவற்றை அழிக்க ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவு செய்தும், அவற்றை முழுமையாக அகற்ற முடியவில்லை. மேலும், மழை காலங்களில் அடையாற்றில் வெள்ளம் சீராக செல்லும் வகையில் சேதமடைந்த கரைகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வரதராஜபுரம் நலமன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் கூறியது: கடந்த, 2015-ம் ஆண்டு முதல் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
அரசு எடுக்கும் நடவடிக்கையால் ஒவ்வொரு ஆண்டும் பாதிப்புகள் குறைய தொடங்கியுள்ளது. நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அடையாறு ஆற்றின் பல பகுதிகளில் செடி, கொடிகள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படாமல் உள்ளது.
அடையாறு ஆற்றை உடனடியாக தூர்வார வேண்டும். மேலும், கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஆற்றில் அதிக அளவில் ஆகாயத்தாமரை அனைத்து பகுதிகளிலும் பரவிகிடக்கிறது. இவற்றை அகற்றினால் தான் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் தங்கு, தடையின்றி விரைவாக வெளியேறி செல்ல ஏதுவாக இருக்கும். வரதராஜபுரத்தில், 2023-ம் ஆண்டு கரை உடைந்த சில பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் கட்டப்படவில்லை.
அந்த இடங்களில் கரை உடையும் அபாயம் இருப்பதால் உடனடியாக தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மேலும் கரையை உயர்த்துவதுடன், பலப்படுத்தவும் வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் வரதராஜபுரம் பகுதிக்கென தனியாக ஒரு பொக்லைனை தயாராக
வைத்திருக்க வேண்டும்.
மேலும், வெள்ளத்தடுப்புக்கு மணல் மூட்டைகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என வேண்டுகிறோம். இது குறித்து விரிவாக காஞ்சிமாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம். எனவே பருவமழை வலுக்கும் முன்னரே ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றி, நீர் தடையின்றி செல்ல நீர்வளத்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அடையாறு ஆறு தொடங்கும் இடம் முதல் திருநீர்மலை வரை ரூபாய் 1 கோடியை 50 லட்சம் மதிப்பீட்டில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. அதனுடன் அடையாறு ஆற்றின் கிளை கால்வாய்களான ஆதனூர், மண்ணிவாக்கம், ஒரத்தூர், சோமங்கலம், மணிமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள கிளை கால்வாயின் ஆகாயத்தாமரைகளும் அகற்றப்பட உள்ளது.
இதற்காக டெண்டர் விடப்பட்டு ஓரிரு வாரங்களில் பணிகள் தொடங்கும். மேலும், அடையாறு ஆற்றின் கரைகளை சீரமைக்கவும் தடுப்புச் சுவர்களை அமைக்கவும் அரசு நிதி ஒதுக்கினால் அந்த பணிகள் செய்யப்படும் என நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.