

சென்னை: ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு அறிவுறுத்தியுள்ளார். வனத்துறை சார்பில் உலக பாம்பு தின நிகழ்ச்சி கிண்டி குழந்தைகள் இயற்கை பூங்காவில் நேற்று நடைபெற்றது.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ‘தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்’ என்ற தலைப்பில் சிறு நூல் மற்றும் விழிப்புணர்வு சுவரொட்டியை வெளியிட்டார். பாம்பு மீட்பு பணியாளர்களுக்கு மீட்பு கருவிகளையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நாகம் (NAAGAM) என்ற ஸ்மார்ட்போன் செயலியை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
142 வகையான பாம்புகள்: தமிழகத்தில் 142 வகையான பாம்புகள் வாழ்கின்றன. ஆனால் இவை இன்றும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. உலகம் முழுவதும் பாம்புகள் வழிபடப்படும் உயிரினங்களாக இருந்தாலும், அவற்றை சுற்றியுள்ள பல்வேறு புதிர்கள், புராணங்கள், அச்சங்கள் இன்னும் நீங்கவில்லை. ஆனால் பாம்புகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மறுக்க முடியாதது. அவை வனப்பகுதியின் சமநிலையை பாதுகாக்கின்றன.
நகரங்களில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் பாம்புகளை பெரும்பாலும் பயத்துடன் பார்க்கின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் மக்கள் பாம்புகளுடன் இணக்கமாக வாழக் கற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தத் துறையில், இருளர் சமூகத்தினர் பாம்புகளை பாதுகாக்கும் பணியில் அற்புதமான அறிவும், செயல்பாடும் காட்டியுள்ளனர். இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு 80 சதவீத விஷ எதிர்ப்பு மருந்துகள் தமிழகத்தில் இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இருளர் சமுதாயத்தினர் பங்கு முக்கியமானது.
நாகம் செயலி: பொதுமக்கள் பாம்புகளை பார்த்தால், நாகம் செயலியில் தெரிவிக்கலாம். தகவல் கிடைத்தவுடன், பயிற்சி பெற்ற மீட்பு குழுக்கள் அந்த இடத்துக்கு சென்று அறிவியல் முறையில் பாதுகாப்பாக பாம்புகளை பிடித்து அதற்கான வாழ்விடத்தில் விடுவிப்பர். வனத்துறை அதிகாரிகள் அறிவியலற்ற மற்றும் ஆபத்தான முறையில் பாம்பு பிடிப்பதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்புகளை கையாளும் பணியில் பயிற்சி பெற்ற நிபுணர்களே அறிவியல் முறைகளை பின்பற்றிக் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) எச்.வேணுபிரசாத், வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் ரிட்டோ சிரியாக், மெட்ராஸ் முதலை பண்ணை அறக்கட்டளை இயக்குநர் பிரமிளா ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.