

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால் ஒவ்வொரு இரவையும் திகிலுடன் கழிப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகம் வாழைத்தோட்டம் அடுத்த ஜோடிசுனை பகுதியில் விநாயகம் என்ற விவசாயி வீட்டின் முற்றத்தில் இருந்த சேவலை நேற்று அதிகாலையில் சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது. அந்த விவசாயி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சி சமூக ஊடகங்கள் வழியாக பரவிய நிலையில் சுற்று வட்டார கிராம மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் கூறியதாவது: பாலக்கோடு வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ள வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. வனத்தையொட்டிய குன்றுகள் மீது பகல் நேரங்களிலும் சிறுத்தை நடமாடியுள்ளது. இதுதவிர, இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைந்து கோழிகளையும், நாயையும் கவ்விச் சென்ற சம்பவம் 5 முறைக்கு மேல் நடந்து விட்டது.
சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்தால் வனத்துறை குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்வதுடன், சில நாட்கள் வரை கண்காணிப்பிலும் ஈடுபடுகின்றனர். இருப்பினும், தொடக்கத்தில் எப்போதாவது வெளியில் வந்த சிறுத்தை தற்போது அடிக்கடி நடமாடி வருகிறது. இதனால் இங்குள்ள கிராம மக்கள் கடும் அச்சத்தில் இருக்கிறோம். வீட்டில் வளர்க்கும் நாய்கள் இரவில் குரைத்தாலும், கோழிகள் ஓசை எழுப்பினாலும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கத்தினாலும் தைரியமாக வெளியில் வந்து பார்க்க அச்சமாக உள்ளது.
இப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் தொடங்கும்முன்பு ஒவ்வொரு விவசாய குடும்பங்களிலும் இரவில் வீட்டின் முற்றத்தில் யாராவது ஒருவர் படுத்து உறங்குவோம். தற்போது முன்னிரவில் வீட்டுக்குள் சென்று முடங்கினால் விடிந்த பிறகு தான் வெளியில் வருகிறோம். ஒவ்வொரு இரவையும் திகிலுடனே கழிக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளோம். எங்களின் நிலை கருதி சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்துச்சென்று அடர்வனப் பகுதியில் விடுவிக்க வனத்துறை அதிகாரீகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
இது குறித்து பாலக்கோடு வனச்சரகர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, ‘சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிந்ததும் உயர் அதிகாரிகள் வழிகாட்டுதல்படி பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரகங்களில் இருந்தும் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு 50 பேர் அடங்கிய குழுவினர் 4 பிரிவாக பிரிந்து வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ட்ரோன் கேமரா மூலம் வனத்தையொட்டிய பகுதியில் உள்ள பாறை இடுக்குகள் உள்ளிட்ட இடங்களையும் கண்காணித்து வருகின்றனர். கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படியும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கூண்டு வைத்து பிடிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்வர், என்றார்.
வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் பகுதியில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நேரில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.