

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்ட குழுவினர் மாஞ்சோலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் மாஞ்சோலை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் தேயிலை உற்பத்தியில் மும்பையை சேர்ந்த பி.பி.டி.சி. நிறுவனம் ஈடுபட்டிருந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்திருப்பதாலும், அது காப்புக்காடாக இருப்பதாலும், வரும் 2028-ம் ஆண்டுக்குள் உற்பத்தியை நிறுத்தவும், தொழிலாளர்களை வெளியேற்றவும், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்னரே பி.பி.டி.சி. நிறுவனம், மாஞ்சோலையில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது. இங்குள்ள மலை கிராமங்களான மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் 4 தலைமுறைகளாக வசித்துவந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளையும் அந்நிறுவனம் மேற்கொண்டது.
மாஞ்சோலை பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராகவும், தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்ட குழுவினர் மாஞ்சோலை பகுதியில் இன்று (ஜூன் 24) ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் சித்தாந்த தாஸ், உறுப்பினர்கள் சந்திரபிரகாஷ் கோயல், ஜே.ஆர்.பட், சுனில் லிமாயி ஆகியோர், தனியார் நிறுவனத்தால் ஒப்படைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தனர். அவர்களுக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆர்.சுகுமார் பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை உயர்மட்ட குழுவினர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அங்கிருந்து வெளியேற்றப்படும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் குழுவினர் கேட்டறிந்தனர்.