

கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. பலாப்பழங்களை ருசிப்பதற்காக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களின் அருகே காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.
இந்நிலையில், தேவாலா ரவுஸ்டன் முல்லை எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே ‘மொட்டை வால்’ காட்டு யானை குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வருகிறது. அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அங்கு வனத்துறையினர் வந்து நீண்ட நேரமாக போராடி காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டினர். நாள்தோறும் குடியிருப்புப் பகுதிக்குள் உலா வரும் இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதோடு, மீண்டும் குடியிருப்புக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினர் கூறும்போது, ‘‘தேவாலா பகுதியில் சுற்றித்திரியும் இந்த யானைக்கு, வால் துண்டாகி சிறிதளவே இருக்கும். எனவேதான் இதை ‘மொட்டை வால்’ யானை என மக்கள் அழைக்கின்றனர். பலாப்பழ வாசத்தை நுகர்ந்து, அதை உண்பதற்காகவே யானை இப்பகுதிக்கு வருகிறது. தற்போது யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளோம்.
இரவு நேரத்தில் ஒற்றை யானை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி, இரவு நேரத்தில் சாலையில் நடமாட வேண்டாம் எனவும், யானையை கண்டால் அதை புகைப்படம் எடுக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என மக்களை எச்சரித்துள்ளோம்’’ என்றனர்.