வால்பாறையில் தாய் கண்முன்னே 4 வயது சிறுமியை கவ்விச் சென்ற சிறுத்தை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் தாய் கண் முன்னே, 4 வயது சிறுமியை சிறுத்தை கவ்விச் சென்றது. சிறுமியை போலீஸார் மற்றும் வனத்துறையினர் தேடி வருகின்றனர். வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்களில் தமிழகம் மட்டுமின்றி அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எஸ்டேட்களுக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி வேலைக்குச் சென்று வருகின்றனர். அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர், வால்பாறையில் உள்ள பச்சமலை எஸ்டேட்டில் தங்கி தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தம்பதிக்கு 4 வயதில் ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சிறுமி ரோஷினி வீட்டருகே உள்ள காளியம்மன் கோயில் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். சிறுமியின் தாய் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென வெளியே வந்து, ரோஷினி மீது பாய்ந்து கழுத்தை கவ்வியது. இதைப் பார்த்து சிறுமியின் தாய் அலறினார். அதற்குள் சிறுத்தை சிறுமியை கவ்வியபடி இழுத்துக் கொண்டு புதருக்குள் ஓடி மறைந்தது.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் வால்பாறை காவல்துறையினரும் சிறுமியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் வால்பாறையில் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in