

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க தொலைதொடர்பை ஏற்படுத்த வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே உள்ளன. இதனால், காட்டு மாடு, புலி, சிறுத்தை, கரடி, மான்கள் மற்றும் காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் தேயிலைத் தோட்டங்களுக்குள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. அங்குள்ள பயிர்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது தாக்கி வருகின்றன.
ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி தாலுகாக்களில் காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களில் வலம் வரும் காட்டு மாடுகள், தேயிலைத் தொழிலாளர்களை விரட்டுவதால் அச்சத்தில் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடுகள் தாக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர். வனவிலங்குகளால், மனித உயிரிழப்புகளை தடுக்க தொலைதொடர்பு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்ட ஆரிகவுடர் விவசாயிகள் சங்க தலைவர் மஞ்சை.வி.மோகன் கூறியதாவது: வனவிலங்குகளிடம் இருந்து விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்ற வேண்டுமெனில், தமிழகம் முழுவதும் அவசர காலத்தில், வனத்துறையினரை எளிதாக மக்கள் தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்ணை ஏற்படுத்த வேண்டும்.
இதனால், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு தாமதமின்றி வரவும், வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்டவும் வாய்ப்பு ஏற்படும். நீலகிரி போன்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்போன்களில், வனத்துறையினரை உடனடியாக தொடர்பு கொள்ள முடிவதில்லை. வனச்சரகர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் வாக்கிடாக்கி வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றும் வனத்துறையினருக்கு நிரந்தர செல்போன் எண் வழங்க வேண்டும். அவர்கள் வேறிடங்களுக்கு பணியிடம் மாறிச்செல்லும் பட்சத்தில், புதிதாக அப்பணியிடத்துக்கு வருவோருக்கு அந்த எண்ணை வழங்க வேண்டும். ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிக அளவில் தொடர்பு கொள்ளும், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், பொதுத்துறை நிறுவனங்க ளான மின்சாரத் துறை, போக்கு வரத்துத் துறை போன்ற பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு வழங்குவதைப் போல, வனத்துறையினருக்கும் நிரந்தர எண் வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.