

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரம் உள்ள மரத்தில் இரு கால்களை வைத்து பலாப்பழத்தை லாவகமாக பறித்து காட்டு யானை உட்கொண்டதை சுற்றுலா பயணிகளும், வாகனஓட்டிகளும் கண்டு ரசித்தனர்.
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள், கூட்டம் கூட்டமாக குன்னூருக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் குன்னூர் மலைப்பாதையில் புதுக்காடு அருகே சாலையோரம் குட்டியுடன் 3 காட்டு யானைகள் முகாமிட்டன.
அங்குள்ள பலா மரத்தின் மீது இரண்டு கால்களை வைத்து, பலாப் பழத்தை பறித்து யானைகள் உட்கொண்டன. இந்த காட்சியை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வியந்ததோடு, செல்போன்களில் வீடியோ எடுத்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ”யானைக் கூட்டம் தண்ணீருக்காக சாலையை கடப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மலைப் பாதையில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்” என்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ”குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், பகல் நேரங்களில் யானைக் கூட்டம் உலா வருவதால், வாகன ஓட்டிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கவனமுடன் பயணிக்க வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.