

ராமேசுவரம்: அரபிக்கடலில் மூழ்கிய லைபீரியா நாட்டு சரக்கு கப்பலிலிருந்து வெளியேறி தனுஷ்கோடி கரையில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகள் தொடங்கி உள்ளன.
கடந்த மாதம் கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் அரபிக் கடலில் மூழ்கியது. இந்த கப்பலில் இருந்த கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்கள், கால்சியம் கார்பைடு, டீசல், பர்னஸ் ஆயில் இருந்தது. கப்பல் மூழ்கிய கடந்த 2 வாரங்களில், கடல் நீரோட்டத்தில் கப்பலிலிருந்த சில பொருட்கள் கேரள மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஒதுங்கிய வண்ணம் இருந்தது.
நேற்று (திங்கட்கிழமை) மன்னார் வளைகுடா கடல் தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சாக்கு மூடைகளில் வெள்ளை நிற பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் கரை ஒதுங்கின. 2-வது இன்றும் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் முந்திரி கொட்டை ஓடுகள் கரை ஓரங்களில் சிதறி கிடந்தன.
தனுஷ்கோடி மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் துகள்கள், முந்திரிக் கொட்டைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியை ராமேசுவரம், ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி நகராட்சியைச் சேர்ந்த 150 தூய்மைப் பணியாளர்கள், இந்திய கடலோர காவல்படை வீரர்கள், பேரிடர் மேலாண்மை தன்னார்வலர்கள், மீன்வளத் துறையினர், திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள், வனத்துறை தன்னார்வலர்கள் ஆகியோர் இன்று (ஜூன் 10) தொடங்கினர்.
மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ராமேசுவரம் தீவு மன்னார் வளைகுடா கடற்பகுதியான அரிச்சல்முனை முதல் பாம்பன் கடலோரப் பகுதி வரை உள்ள மீனவர்கள் தற்போது கடற்கரை முழுவதும் ரசாயன பிளாஸ்டிக் உதிரி பொருட்கள் பரவியுள்ளதால் தனுஷ்கோடியில் இருந்து பாம்பன் வரையிலான நாட்டுப் படகு மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டாம் எனவும், மேலும் மீனவர்கள் இது சம்பந்தமாக அச்சப்பட வேண்டாம் எனவும் மீன்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் துகள்கள் மாதிரி எடுக்கப்பட்டு கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை ஆய்வகத்துக்கு கடல்சார் விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் வாழும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை ஒதுங்கி வரும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் பல்லுயிர் பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுமா? மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் மீன் இனப்பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.