

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெரும் பூநாரை சரணாலயத்தின் 524 ஹெக்டேர் பரப்பு எல்லைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா கடந்த ஜூன் 5-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில், தனுஷ்கோடியில் பெரும் பூநாரைகள் சரணாலயத்தை அறிவித்தார். இது 524.78 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இதன் எல்லைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
தனுஷ்கோடி பெரும் பூநாரைகள் சரணாலயம், பல்லுயிர் வளம் அதிக அளவில் கொண்ட மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் 524.78 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராமேசுவரம் தீவின் கடைகோடியில் உள்ள சதுப்பு நிலங்களில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பெரும் பூநாரைகள் உள்ளிட்ட வலசை பறவைகள் இடம் பெயர்வதற்கான மத்திய ஆசிய பறவைப் பாதையின் முக்கியப் பகுதியாகும்.
இந்த சரணாலயம் புலம் பெயர்ந்த ஈர நில பறவைகளுக்கான வலசைப் பாதையிலும் அமைந்துள்ளது. இங்கு நிலப்பரப்பை சார்ந்த 55 வகையான பறவை இனங்களும், நிலப்பரப்பை சாராத புலம்பெயர்ந்த 73 பறவை இனங்களும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை 700 பூநாரைகள் மற்றும் 4,300 அலைந்து திரியும் பறவை இனங்கள் இங்கு வருகை புரிகின்றன.
இந்த சரணாலயம் அமைக்கப்படுவதன் மூலம் இந்த உயிர்க்கோளக் காப்பகத்தின் பல்லுயிர் சமநிலை பாதுகாக்கப்படுவதுடன், இங்கு வருகைபுரியும் பறவை இனங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. இந்த பறவைகள் சரணாலய அறிவிப்பு மூலம், தமிழகத்தில் பறவைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.