Published : 06 Jun 2025 06:01 AM
Last Updated : 06 Jun 2025 06:01 AM

தமிழகத்தில் முதன்முறையாக ஊட்டி நகராட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஊட்டி நகராட்சியில் கழிவு மேலாண்மையை செயல்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சித் தலைவர் எம்.வாணீஸ்வரி, ஆணையர் வினோத் உள்ளிட்டோர். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |

ஊட்டி: தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் தினமும் 35 டன் கழிவு மற்றும் குப்பை சேகாரமாகிறது. குப்பையைக் கையாள்வது மற்றும் அகற்றுவதில் சிக்கல்கள் நிலவி வருகின்றன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் ஊட்டிக்கு வருவதால் தினமும் அதிக அளவு குப்பை சேகாரமாகிறது. ஆட்கள் பற்றாக்குறை, காலநிலை மற்றும் நில அமைப்பு ஆகிய காரணங்களாக குப்பையை சேகரிப்பதில் சவால் நிலவுகிறது.

இந்நிலையில், ஊட்டி நகராட்சி தற்போது கிண்ட்ரில் மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் துணையுடன், ஏ.ஐ. தொழில்நுட்ப உதவியுடன் குப்பையைக் கையாள முயற்சி மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக ஊட்டி நகராட்சி காந்தல் பகுதியில் இதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையொட்டி, காந்தல் பகுதியை சேர்ந்த 13 வார்டு கவுன்சிலர்களுடன் நேற்று நகராட்சித் தலைவர் எம்.வாணீஸ்வரி, ஆணையர் வினோத், நகர் நல அலுவலர் சிபி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த திட்டம் குறித்து நகராட்சித் தலைவர் எம்.வாணீஸ்வரி கூறியதாவது: இந்த திட்டம் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், மக்கள் பங்கேற்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம், மாசுபாட்டு சவால்களுக்கு நீண்டகால தீர்வைத் தரும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய இடங்களில் செயற்கை நுண்ணறிவுவுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். இது பொதுமக்கள் குப்பையை வீசிச் செல்லும் நிலைகளை பகுப்பாய்வு செய்து, திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவும். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடு வீடாக டிஜிட்டல் பிரச்சாரம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு சேகரிப்பு உத்திகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்படும். அதோடு, அவர்களது பாதுகாப்புக்கான உபகரணங்கள் வழங்கப்படும். 1,500 வர்த்தக இடங்களில் உலர் கழிவுகளுக்கான வலைப்பைகளும், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை நசுக்கும் இயந்திரங்களும் நிறுவப்படும். ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் 14 பொதுக் கழிவறைகளிலும் சானிடரி நாப்கின் எரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும்.

குப்பை சேகரிப்பு வாகனங்களில் ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்படும், இதன்மூலம் சேவைகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் திறம்பட நடைபெறும். இந்த திட்டம் மூலம், தூய்மையான நகரச் சூழலை உருவாக்குவது மட்டுமல்ல, கழிவு மேலாண்மையில் நவீனத் தொழில்நுட்பப்பூர்வமான, மக்கள் பங்கேற்புடன் கூடிய முறையை நிலைநாட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொண்டு நிறுவன துணைத் தலைவர் என்.பைரவ் கூறும்போது, ‘‘இத்திட்டம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஊட்டி நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் ஏ.ஐ. கேமரா மற்றும் உபகரணங்கள் நிறுவப்பட்டு, திட்டம் செயல்படுத்தப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x