தமிழக அரசின் தூய்மை இயக்கம் மூலம் 1,100 அரசு அலுவலகங்களில் இருந்து 250 டன் கழிவு பொருட்கள் அகற்றம்

தமிழக அரசின் தூய்மை இயக்கம் மூலம் 1,100 அரசு அலுவலகங்களில் இருந்து 250 டன் கழிவு பொருட்கள் அகற்றம்
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் தூய்மை இயக்கம் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 1,100 அரசு அலுவகங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் 250 டன் கழிவு பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் திடக் கழிவு மேலாண்மைக்கான தூய்மை இயக்கத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதை செயல்படுத்த ‘தூய்மை தமிழ்நாடு நிறுவனம் (CTCL) என்ற அமைப்பு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் பணியாக, உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று மாநிலம் முழுவதும் 1,100 அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அலுவலக கழிவுகளை சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சென்னை தலைமைச் செயலகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநரகங்கள், சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என மொத்தம் 1,100 அலுவலகங்களில் உள்ள பிளாஸ்டிக், உலோக பொருட்கள், காகிதங்கள், கண்ணாடி, பயன்படுத்த முடியாத மர தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான கழிவு பொருட்களை சேகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இந்த அலுவலகங்களில் கழிவுகளை அப்புறப்படுத்தி, அவற்றை சேகரிக்க வந்தவர்களிடம் அளித்தனர். இந்த பணிகளை கண்காணிக்க சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்கு வந்து பார்வையிட்டு, அறிவுரைகள் வழங்கினார்.

இதன்மூலம் மாநிலம் முழுவதும் 250 டன் அளவில் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. உயர் தொழில்நுட்பம் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு இவற்றை மீள்பயன்பாடு, மறுசுழற்சி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த கட்டமாக கிராம ஊராட்சிகளில் உள்ள அலுவலகங்களிலும், பின்னர் அரசு கல்வி நிறுவனங்களிலும் கழிவுகள் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in