Published : 05 Jun 2025 07:46 PM
Last Updated : 05 Jun 2025 07:46 PM
கோவை: “காவேரி கூக்குரல் இயக்கம் கடந்தாண்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டு, தமிழகத்தில் 1.21 கோடி மரங்களை நட இலக்கு நிர்ணயித்துள்ளது” என ஈஷா மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் 1.36 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் மூலம் அவர்களின் நிலங்களில் நடவு செய்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடியே இருபத்தியோரு லட்சம் மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் துவக்க விழா, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜூன் 5) ஓசூர் பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பாக ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம்’ திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரச மரங்கள் நடப்பட்டன.
இது தொடர்பாக சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முறையான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம் வளம் இழந்த நிலத்தை மீண்டும் வளமாக்க முடியும் என்பதை காவேரி கூக்குரல் இயக்கம் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது. மண் மற்றும் நீரால் ஊட்டம் பெறும் அனைவரும் இந்த இயக்கத்தில் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும். இவ்வியக்கம் மூலம், கடந்த நிதி ஆண்டில் 34,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1.36 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த ஆண்டு இந்த சுற்றுச்சூழல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் (2025 - 2026) தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளியில் உள்ள செயின்ட் பீட்டர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஒசூர் மாநகர மேயர் சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்’ என்று அவர் கூறியுள்ளார்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட இயக்குநர் ஆனந்த் எத்திராஜலு, “UNFCCC-ன் COP29 மற்றும் UNCCD-ன் COP16 உச்சி மாநாடுகளில் நாங்கள் முன்நிறுத்திய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று, உலகளாவிய காலநிலை நிதியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே விவசாயம் மற்றும் உணவு அமைப்புகளை அடைகிறது என்பதாகும். காலநிலை மாற்றத்தை வளிமண்டலத்தில் சரிசெய்ய முடியாது. அதை மண்ணில் மட்டுமே சரிசெய்ய முடியும். மரம் சார்ந்த விவசாயம் மூலம் மண் புத்துயிர் பெறுவதற்கு அதிக கவனமும் முதலீடும் அவசியம். இதுதான் உடனடியாக செய்யப்பட வேண்டியது. அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருகிறது. அதனுடன் கூடுதலாக பேரூர் ஆதீனத்துடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள 12,000-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரச மரங்களை நடுவதை இலக்காகக் கொண்டு “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” என்ற திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக கிருஷ்ணகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்தும் வகையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற பகுதிகளில் அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த மரம் நடும் விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டத்தின் மூலம் நடவு செய்த அரச மரக்கன்றுகள், அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த தன்னார்வலர் குழுக்களால் பராமரிக்கப்பட உள்ளன. காவேரி கூக்குரல் இயக்கம் 2024-ம் ஆண்டில், மரம் சார்ந்த விவசாயம் குறித்த மாநில அளவில் 2 பெரிய பயிற்சி நிகழ்ச்சிகளையும், மண்டல அளவில் 6 நிகழ்ச்சிகளையும் நடத்தியது.
இதில் 8,721 விவசாயிகள் பங்கேற்றனர். தேசிய வாழை ஆராய்ச்சி மையம் , இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் , தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் , மற்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் மரம் சார்ந்த விவசாயம் குறித்து நுட்பங்களை விவசாயிகளுடன் பகிர்ந்தனர்.
இவ்வியக்கம் மூலம் 2024-ம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் (ஜூன் 5), வன மகோற்சவ வாரம் (ஜூலை 1-7), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மற்றும் உலக மண் தினம் (டிசம்பர் 5) போன்ற முக்கிய நாட்களில், 506 மரம் நடும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மொத்தம் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஈஷா நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன.
இதற்காக கடலூரில் 85 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும், திருவண்ணாமலையில் 15 லட்சம் உற்பத்தி திறன் கொண்ட ஒரு நர்சரியும் இவ்வியக்கம் மூலம் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் தமிழ்நாட்டில் 40 விநியோக நர்சரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT