

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளம்ஸ் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பலத்த காற்று, மழையின் காரணமாக விலை குறைந்துள்ளது. கொடைக்கானலில் பெரும்பள்ளம், மேல்பள்ளம், பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, பேத்துப்பாறை, வடகவுஞ்சி ஆகிய மலைக் கிராமங்களில் பிளம்ஸ் பழங்கள் பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு இரண்டு முறை விளைச்சல் கிடைக்கும். இங்கு விளையும் பிளம்ஸ் பழங்கள் வெளி மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, வெளி மாநிலங்களுக்கும் அதிகளவு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் பலத்த காற்று, தொடர் மழை காரணமாக, பிளம்ஸ் பழங்கள் மரத்திலிருந்து கொத்துக் கொத்தாக உதிர்ந்து வீணாகின. இதனால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விளைச்சல் பாதியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், விலையாவது அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது.
சீசன் காரணமாக மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து அதிகரித்துள்ளதால், பிளம்ஸ் பழங்களின் நுகர்வு குறைந்துள்ளது. எனவே, விலை குறைந்து ஒரு கிலோ பிளம்ஸ் ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிளம்ஸ் பழத்தை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு பிளம்ஸ் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம். எதிர்பாராதவிதமாக பெய்த மழை, பலத்த காற்று காரணமாக விளைச்சல் பாதித்துள்ளது. கோடை சீசன் சமயத்தில் நல்ல விலை கிடைக்கும் என்ற ஆறுதலோடு இருந்தோம்.
ஆனால், நுகர்வு குறைவால் விலையும் குறைந்துள்ளது. எங்களிடம் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.100-க்கு கொள்முதல் செய்து, வெளிச்சந்தையில் ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்கின்றனர். கோடை விடுமுறை முடிந்துவிட்டதால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து, பிளம்ஸ் உள்ளிட்ட பழங்களின் விற்பனையும் மந்தமாகியுள்ளது என்றனர்.